‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்வேன்’ : அரசியல் கட்சி குறித்து ரஜினி பேட்டி..!!

30 November 2020, 12:51 pm
rajini press meet cover - - updatenews360
Quick Share

சென்னை : அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இருப்பினும், தக்க நேரம் வரவேண்டும் அதற்காக காத்திருப்பதாகக் கூறி, 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இதனிடையே, கொரோனா சூழலில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஷாக் கொடுத்தார் ரஜினி.

இந்த சூழலில், அரசியல் நடவடிக்கை தொடர்பாக மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, மாவட்ட வாரியாக மக்களிடம் தனக்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருப்பது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்றும், முதலமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்தே நிற்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு, தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசியல் கட்சி துவங்குவது குறித்து தான் முடிவெடுப்பேன், பொறுத்திருங்கள் என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஜினியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, “புதிய கட்சி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ரஜினியின் முடிவுக்கு கட்டுப்படுவோம். எப்போதும் அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம். அவரை காண்பதே எங்களுக்கு மகிழ்ச்சி. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் அவர் அறிவிப்பை வெளியிடுவார்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “அரசியல் கட்சி தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தேன். நானும் என்னுடையே கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியிடுவேன்,” எனத் தெரிவித்தார்.

Views: - 13

0

0