திமுக அலுவலகத்தை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : கண்ணாடிகள் விரிசலால் திமுக, வி.சி.க உறவில் விரிசல்..?

1 March 2021, 7:10 pm
anna arivalayam - thiruma - updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அண்ணா அறிவாலயம் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள், அங்கு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் தனது 63வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு சக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

stalin - updatenews360

அந்த வகையில், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது ஆதரவாளர்களுடன், அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கச் சென்றார். அப்போது, திருமாவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்களை அறிவாலயத்திற்குள் நுழைய விடாமல், நெடுநேரம் காக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர்.

Thirumavalavan - stalin - updatenews360

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அவர்கள் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் இருந்த ராட்சத கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அறிவாயத்தில் சற்று அசாதாரண சூழ்நிலை நிலவியது.

DMK office damage 1 - updatenews360

மேலும், “கடந்த 2016 தேர்தலிலும், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் திமுக எங்களுடன் கூட்டணி வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் சமுதாய மக்களின் வாக்குகளை பெற்று பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது, எங்கள் தலைவரேயே வெளியில் நிக்க வைக்கிறியா ஸ்டாலின்… உனக்கு இந்த தேர்தலில் கெட்டகாலம் தொடங்கிடுச்சு,” என குரல் எழுப்பினர்.

பின்பு போலீசார் வந்து பிரச்சனையை சரிசெய்த நேரத்தில், அறிவாலயத்தின் உள்ளே இருந்து அழைப்பு வர திருமாவளவன் உள்ளே சென்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு திரும்பினார்.

ஏற்கனவே, குறைந்த தொகுதிகள் ஒதுக்கீடு, சொந்த சின்னத்தில் போட்டியிட தடை உள்ளிட்ட நெருக்கடிகளால் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி நீடிக்குமா..? என்ற சூழல் நிலவி வருகிறது. இப்படியிருக்க, இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விடுதலை சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அலுவலகத்தை அக்கட்சியினர் சேதப்படுத்திய சம்பவம், இரு கட்சிகளிடையே மேலும் விரிசலை உண்டாக்கியுள்ளது.

Views: - 4148

9

4