திமுகவுடன் மோதலா…? அவதூறு பாதிரியாருக்கு முட்டுக்கொடுக்கும் விசிக!!

Author: Babu
26 July 2021, 2:28 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18-ம் தேதி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் சார்பில் உரிமை மீட்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வீண் சவடால்

தேவாலயங்களை மூட உத்தரவிட்டது, வீடுகளில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்துவதற்கு தடை மற்றும் தேவாலயங்களை சீரமைக்கவும், கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும் கண்டித்து நடந்த இந்த கூட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி, திமுக முன்னாள் எம்எல்ஏ சுரேஷ்ராஜன் ஆகியோரை மிக இழிவாக பேசியதுடன் நக்கலாக கிண்டலும் செய்தார்.

kumari father - updatenews360

“உங்கள் திறமையால் நீங்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து போட்ட பிச்சையால்தான் வெற்றி பெற்றீர்கள்” என்று
சேகர்பாபுவையும், மனோ தங்கராஜையும் பங்கம் செய்தார்.

தனது உரையின் உச்சத்தில் மிகுந்த ஆணவத்துடன் பாரத மாதா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவர் பேசியது வெறுப்புணர்வையும், மதக் கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்திருந்தது.

15 நாள் காவல்

இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதிரியாரின் பேச்சுக்கு கண்டனம் எழுந்தது. இந்த விவகாரம் தேசிய அளவிலும் எதிரொலித்தது.

ஜார்ஜ் பொன்னையாவை உடனே கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களிலும் குதித்தனர்.

இதைத்தொடர்ந்து ஜார்ஜ் பொன்னையா மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்
ஆகியோர் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் விடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

father arrest - updatenews360

இதனால் கைதுக்கு பயந்து தலைமறைவான ஜார்ஜ் பொன்னையாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படையினர் வலைவீசி தேடி வந்தனர். பின்னர் அவர் விருதுநகர் மாவட்டம் கள்ளிப்பட்டி அருகே தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதி மன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளருமான ஸ்டீபனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில், ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் திமுக தலைவர்கள் பற்றி பாதிரியார் இழிவாக பேசியதற்கு திமுக சார்பில் எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசோ தோழமையின் சுட்டுதல் என்பதுபோல், யாராக இருந்தாலும் கண்டிக்கிறோம் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டுவிட்டது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்றவை இன்றுவரை சிறு மூச்சு கூட விடவில்லை.

பாதிரியாருக்கு விசிக ஆதரவு

சரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்கே போனது? என்று பார்த்தால் இப்பிரச்சினையில் அது இருக்கும் இடமே தெரியவில்லை. ஆனால் இப்போது அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்
வன்னி அரசு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஜார்ஜ் பொன்னையா கூறியதைத் தொடர்ந்து அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைக் கேள்விப்பட்டதும் விசிக துடிதுடித்துப்போனது.
வன்னி அரசு உடனடியாக டிவிட்டரில் ஒரு பதிவையும் போட்டார். அதில் பாதிரியாரை கைது செய்த திமுக அரசை பாராட்டுவார் என்று நினைத்தால், அதற்கு நேர்மாறாக திமுகவுடன் மோதுவதுபோல் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அந்த பதிவில், “கைது செய்யப்பட்டுள்ள அருட்தந்தை ஜார்ஜ் பொன்னய்யா அவர்களுக்கு ஏற்கனவே, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு
உள்ளது. வயதையும் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு அருட்தந்தையை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா எடுத்து வரும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் விவரங்கள் குறித்த ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டையும், பாதிரியாரின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பதிவுடன் வன்னி அரசு இணைத்தும் இருக்கிறார்.

இந்தப் பதிவின் ஒரு இடத்தில்கூட அவர் பேசியது தவறு என்று பெயரளவுக்கு கூட விசிக தலைவர் ஒருவரான அவர் சுட்டிக் காட்டவில்லை. மாறாக பாதிரியாரை அருட்தந்தை என்றும் அவர்களுக்கு என்றும் மிகுந்த மரியாதையோடு குறிப்பிடுகிறார்.

அதாவது அன்பு, மதநல்லிணக்கம் சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்க வேண்டிய ஒரு பாதிரியார் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதக் கலவரத்தை தூண்டிவிடும் வகையிலும் பேசியது பற்றி விசிகவினர் எந்த கவலையும் பட்டதாக தெரியவில்லை.

மனிதாபிமானத்திற்கு இடம் கிடையாது

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 75 வயது என்கிறார்கள். அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். நியாயமான கோரிக்கைதான். ஆனால் 50 வருடங்களுக்கும் மேலாக மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் அனுபவ முதிர்ச்சி பெற்ற ஒரு பாதிரியார் இப்படி பேசியது ஏன் என்பதை சிலர் கண்டிக்காதது, மிகவும் கவலைக்குரியது.

அதேபோல பேசுவதை எல்லாம் பேசிவிட்டு வருத்தம் தெரிவிப்பது என்பதையும், பழுத்த அரசியல்வாதிகள் போல பாதிரியார் சாக்கு போக்கு கூறுவதையும் ஏற்க முடியாது. இப்பிரச்சினை தொடர்பாக அவர் மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. இதுபோல் பேசிவிட்டு வருத்தம் தெரிவித்தால் போதுமா?… யாராக இருந்தாலும் சரி, எந்த மதத்தை இழிவுபடுத்தி பேசினாலும் சரி, எந்த தலைவர்களை அவதூறக பேசினாலும் சரி, அது எந்த வயதினராக இருந்தாலும் சரி அவர்கள் கம்பி எண்ண வேண்டியவர்கள்தான். இதில் கருணை, மனிதாபிமானம் என்பதற்கெல்லாம் இடமே கிடையாது” என்று குறிப்பிட்டனர்.

அரெஸ்ட் சமயத்தில் மட்டும் நெஞ்சுவலியா..?

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில், “அது எப்படி இந்த அரசியல்வாதிகளுக்கு, கிரிமினல்களுக்கு, தேசத்துரோகிகளுக்கு எல்லாம் குற்றம் செய்யும்போது சூப்பரா வேலை செய்யுற இதயம் சரியாய் அரெஸ்ட்டு சமயத்துல மட்டும் நெஞ்சு வலி வந்துருது? இந்த மாதிரி தேசத் துரோகிகளுக்கு கருணையே காட்டக் கூடாது” என்று உணர்ச்சிப் பூர்வமாக கொந்தளித்து இருக்கிறார்.

நெட்டிசன்களும், “அருட்தந்தையா? பாரத மாதாவை பழித்து பேசியவருக்கு பிணையா…?
இதை விட ஒரு கேவலம் இருக்க முடியாது… அவர் பேசுன பேச்சுக்கு குண்டாஸ்ல உள்ள போடணும். இந்த மாதிரி கேவல பாதிரியார்கள் இனி இந்து மதத்தை பத்தி பேச பயப்படணும். ஒரு ரெண்டு வருஷம் உள்ள வைங்க. அப்போதான் அருள் தந்தைக்கு அருள் கிடைக்கும்” என்று வன்னி அரசை வறுத்து எடுத்துள்ளனர்.

Views: - 209

0

0