வேல்யாத்திரைக்கு அனுமதி மறுப்பு..!! ஜெ., பாணியில் சமரசம் இல்லாத எடப்பாடியார்..!

5 November 2020, 5:55 pm
eps - vel yatra- updatenews360
Quick Share

சென்னை : பாஜகவின் வேல் யாத்திரையால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்றும், பல அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், அந்த யாத்திரைக்கு எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. மத்திய ஆட்சிக்கு அதிமுக அரசு பணிந்துபோகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்து வரும் பிரச்சாரத்தை நொறுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த செயல்பாடு, திமுக கூட்டணிக் கட்சிகளின் பாராட்டையும் அள்ளியுள்ளது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் யாத்திரையையாக இருந்தாலும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசு எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாது என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா எப்போதும் உறுதியான அணுகுமுறையைக் கடைபிடித்ததால் இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்டார். வேல் யாத்திரையால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ள சூழலில், ஜெயலலிதாவின் பாதையிலேயே தற்போதைய அரசும் செயல்பட்டு வருகிறது என்பதையும் இந்த நடவடிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

eps - jayalalitha - updatenews360

வேல் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில் இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்தது. இந்த நடவடிக்கைக்கு திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனே பாராட்டு தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்த யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்று திமுக அணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்டுள்ளன. சரியான கருத்தை யார் சொன்னாலும் எதிர்க்கட்சி என்றும், கூட்டணிக் கட்சியென்றும் வேறுபாடு பார்க்காமல் தமிழக அரசு செயல்பட்டுள்ளது பொதுமக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசை எந்தவிதத்திலும் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் திராவிட இயக்கத்தில் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வதாக எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை எதிர்ப்பதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதம் அடிப்படைக் கொள்கைகளில் அசையாத உறுதியுடன் அதிமுக அரசு இருப்பதைக் காட்டுவதாக அமைந்தது.

TN_CM_EPS_UpdateNews360

இதைத் தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கி அதிரடியாக அரசாணை வெளியிட்டு திமுக கூட்டணிக்கட்சிகளின் பாராட்டையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றதில் மு.க.ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கிடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலம் கடத்தி வந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதர அமைச்சர்களும் நேரில் சென்று கேட்டுக்கொண்டபோதும், எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டபோதும் போராட்டம் நடத்தியபோதும், ஆளுநர் அசைந்துகொடுக்கவில்லை. மருத்துவ இடங்களில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த நடவடிக்கையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளிப்படையாகப் பாராட்டி அறிக்கை வெளியிட்டன. திராவிட இயக்கங்களின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழக அரசின் அரசாணையை வெளிப்படையாக வரவேற்று அறிக்கை கொடுத்தார். இந்தப் பிரச்சினையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், திருமாவளவனும், ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசாமல் மௌனம் காத்தனர். தற்போது, வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி தராததை வரவேற்று திருமாவளவனும் மௌனத்தைக் கலைத்துள்ளார். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க வேண்டும் என்பதிலும் அதிமுக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. கட்சியின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு மட்டும்தான் தனது அணியில் இடம் என்று ஆணித்தரமான வகையில் அறிவித்தது, ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டியது.

eps cm- updatenews360

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதற்கு முன் தேர்தலில் தனது கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பேசி முடிவு செய்யலாம் என்றும், முதல்வர் வேட்பாளர் பிரச்சினையை வைத்து அதிக இடங்களை பாஜகவுக்கு ஒதுக்கினால்தான் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்போம் என்று பேரம் பேசலாம் என்றும், பாஜக போட்டிருக்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியும் விதத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி வெளியிட்ட அறிவிப்பு விளங்கியது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பாதி இடங்களை மிரட்டி வாங்கிவிடும் என்று திமுக ஆதரவாளர்கள் பேசியதற்கு மாறாக இந்தியாவையே ஆளும் அக்கட்சிக்கு 5 தொகுதிகள்தான் தரப்பட்டன. கூட்டணிப் பேச்சுகளில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உறுதியான அணுகுமுறையைத்தான் அதிமுக பின்பற்றும் என்று அப்போதே தெளிவானது. கூட்டணிப் பேச்சுகளில் மட்டுமில்லாமல், இந்தித் திணிப்பு, இட ஓதுக்கீடு, சட்டம் ஓழுங்கு, கொரோனாவை கட்டுப்படுத்துவது ஆகிய அனைத்துப் பிரச்சினைகளிலும் பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் அதிமுக பணியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 19

0

0

1 thought on “வேல்யாத்திரைக்கு அனுமதி மறுப்பு..!! ஜெ., பாணியில் சமரசம் இல்லாத எடப்பாடியார்..!

Comments are closed.