இன்று நள்ளிரவு முதல் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு : நாளை முதல் அம்மா உணவகங்களில் மீண்டும் இலவச உணவு!!

18 June 2020, 12:56 pm
amma unavagam 3- updatenews360
Quick Share

சென்னை : இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் சென்னை, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் நாளை முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவுகள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்தான் பாதிப்புகள் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வந்தாலும், தொற்று பரவல் வீரியமாகவே உள்ளது.

இதனிடையே, மருத்துவக் குழுவினரின் பரிந்துரையை ஏற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் 12 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொது முடக்கம் கொண்டு வரப்படுகிறது.

இன்று நள்ளிரவு முதல் 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கும் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாளை முதல் ஜுன் 30ம் தேதி வரையில் தொடர்ந்து 12 நாட்களுக்கு இலவச உணவு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு, அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று உணவுகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.