முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்: பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேசுகிறார்…!!

18 January 2021, 8:37 am
modi vs cm - updatenews360

File Image

Quick Share

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தது. அந்த கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும் அ.தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து பகல் 11.55 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் அவர் செல்கிறார். அவருடன் தலைமை செயலாளர் க.சண்முகம், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள். மதியம் 2.45 மணிக்கு விமானம் டெல்லியை சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரவு 7.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா சென்னை வந்த நேரத்தில் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது முன்னிலையிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தனர். இந்த சூழ்நிலையில் அமித்ஷாவுடனான சந்திப்பு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷாவுடனான சந்திப்பை தொடர்ந்து, டெல்லியில் நாளை காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, அவரிடம் தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்கிறார். நிவர் புயல், புரெவி புயல் மற்றும் கடந்த வாரம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்களுக்காக நிவாரண உதவி கோருகிறார்.

தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்ததை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்து, கொரோனா ஒழிப்பில் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை, வருவாய் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து மீள மத்திய அரசாங்கம் சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோருகிறார்.

இவைதவிர, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோருகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இணைப்பு மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமருக்கு அழைப்புவிடுக்கிறார். மேலும், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக கரூர் – புதுக்கோட்டை இடையே 11 கிலோ மீட்டர் கால்வாய் தோண்டும் திட்டத்தை தொடங்கிவைக்கவும், கல்லணை – கீழ்பவானி விரிவாக்க திட்டங்களை தொடங்கிவைக்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையில் 1000 மெகாவாட் சூரிய வெப்ப மின்சார திட்டத்தையும், ராமநாதபுரம், தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டத்தையும் தொடங்கி வைக்க அழைப்பு விடுக்கிறார்.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம் போல, காவிரி நதியை சுத்தப்படுத்தி வழிநெடுக எந்த இடத்திலும் கழிவு நீர் கொண்டு விடப்படுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது உள்பட பல திட்டங்களை செயல்படுத்தும் ‘நடந்தால் வாழி’ காவிரி திட்டத்திற்கும் நிதி உதவி கோருகிறார்.

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக அவர் பிரதமரை சந்திக்க இருக்கிறார் என்ற நிலையில், அதிகாரிகள் இல்லாமல் பிரதமரை தனியாக சந்திக்கவும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பேசுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லம் திரும்பும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை 5.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.

Views: - 0

0

0