என்ன இருந்தாலும் இந்தியா இப்படி பண்ணியிருக்கக் கூடாது..! மோடி அரசின் அதிரடி முடிவால் புலம்பும் சீனா..!

30 June 2020, 4:10 pm
China_India_Ban_Apps_Updatenews360
Quick Share

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், இந்தியா 59 சீன செயலிகளை தடை செய்வது குறித்து சீன அரசு கவனத்தில் கொண்டுள்ளது மற்றும் நிலைமையை சரிபார்த்து வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு அலுவலகம் ஒரு அறிக்கையில் இந்தியா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சீன செயலிகளை இந்தியா தடை செய்வது குறித்து மேலும் பேசிய ஜாவோ லிஜியன், “சீன வணிகங்களை சர்வதேச மற்றும் உள்ளூர் சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்படுமாறு சீன அரசாங்கம் எப்போதும் கேட்டுக்கொள்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். சீனர்கள் உள்பட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது.” என்று கூறினார்.

பிரபலமான டிக்டாக், வி சாட், யு.சி. பிரௌசர், ஷேர் இட் உள்ளிட்ட 59 சீனா தொடர்பான செயலிகளை தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக இந்திய அரசு நேற்று தடை செய்தது. கால்வான் பள்ளத்தாக்கில் எல்லையில் ஏற்பட்ட பயங்கர மோதலுக்குப் பின்னர், இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கால்வான் பள்ளத்தாக்கின் நிலைப்பாட்டை தீர்க்க இரு நாடுகளும் லெப்டினன்ட் ஜெனரல் மட்ட பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை லேவின் சுஷூலில் நடைபெறுகிறது.

சீன பொருட்களை புறக்கணிக்க மக்கள் மத்தியில் ஒருபுறம் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசு சீனா தொடர்புடைய நிறுவனங்களின் டெண்டர்களை ரத்து செய்துள்ள நிலையில், பொருளாதார ரீதியிலான தாக்குதலின் அடுத்த கட்டமாக, இணைய பாதுகாப்பை உறுதி செய்ய சீன செயலிகளை தடை செய்துள்ளதை மக்கள் வரவேற்று வருகின்றனர். அதே நேரத்தில் சீனாவுக்கு எதிராக இந்தியா பொருளாதார ரீதியாக தாக்க ஆரம்பித்துள்ளதற்கு எதிராக சீனாவின் புலம்பலே இது  கருத்துக்களாக வெளிவருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply