மருத்துவர் இல்லாத அரசு மருத்துவமனை… தாயின் உயிர் பிரிவதை கண்டு கதறிய மகன் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
7 October 2021, 11:42 am
Quick Share

கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்தையா அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியான தனது தாய் உயிரிழந்து விட்டதாகக் கூறி இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்த கோதண்டராமன் – செந்தாமரைச் செல்வி என்ற தம்பதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 24ம் தேதி முதல் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 1ம் தேதி கோதாண்டராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனால், மனமுடைந்து போன அவரது குடும்பத்தினர், தாய் செந்தாமரைச் செல்வியையாவது எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று போராடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் செந்தாமரைச் செல்விக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவியும் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது மகன் மருத்துவரை அழைத்து வரச் சென்றுள்ளார். ஆனால், இரவு நேரத்தில் மருத்துவர்கள் யாரும் அங்கு இல்லாததால், அதிர்ச்சியடைந்த அவர்கள், உறவினர்களின் மூலமாகவே முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

ஆனால், அவர்களின் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. செந்தாமரையின் நாடித்துடிப்பும் குறைந்து போனது. இதனால், கண்ணீரும், கம்பளமாகி நின்ற அவரது மகனும், மகளும், அங்கு நடந்ததை வீடியோவாக பதிவு செய்தனர்.

அவர்களின் வீடியோவில், அவசரகால சமயத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டிய மருத்துவர்கள், ஆட அமர எங்கேயே சென்று பொழுதை கழித்து விட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், தனது தாய் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசு மருத்துவமனை மருத்துவர்களே காரணம் என்று, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கொரோனா தொற்றின் இக்கட்டான காலத்தில் ஓய்வு இல்லாமல் உழைத்து வரும் மருத்துவர்களுக்கு மத்தியில், ஒரு சிலரின் அலட்சியம், ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது. எனவே, அரசு மருத்துவமனைகளில் OP அடிக்கும் மருத்துவர்களை கண்டறிந்து களையெடுத்தால் மட்டுமே, அரசு மருத்துவமனையையும், மருத்துவர்களையும் கடவுளாக நம்பி வரும் ஏழை மக்களின் உயிர் தப்பும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Views: - 313

0

0