மதக்கலவரத்தை தூண்டும் சர்ச்சை பேச்சு… கிறிஸ்துவ பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு : விரைவில் கைதாக வாய்ப்பு..!!

22 July 2021, 7:49 pm
father arrest - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அரசியல் தலைவர்களையும் அவதூறாகவும், மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசிய கிறிஸ்துவ பாதிரியார் மீது 7 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி: நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது’ என சர்ச்சையாக கூறியிருக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார், பிரதமர் மோடியையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்தி, மதவெறியை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் பேசினார். அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்ததுடன், திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்றும் அவர் கூறினார்.

அதோடு, பாரத மாதாவை அவமதித்து பேசியதோடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி, மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசினார். அவர் பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்க முயன்றதாக அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Views: - 408

2

1

Leave a Reply