அதிமுகவுக்குத் திரளும் கிறிஸ்துவர் ஓட்டு… ஒவைசியால் பிரியப்போகும் முஸ்லிம் ஓட்டு : 2021 தேர்தலில் ஸ்டாலினுக்கு வேட்டு!!

10 December 2020, 9:04 am
ADMK - dmk - minortiy votes - updatenews360
Quick Share

சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அசதுத்தீன் ஒவைசியின் முஸ்லிம் கட்சி தமிழத்தில் கால்பதிப்பதால், திமுகவுக்கு வரப்போகும் முஸ்லிம்கள் வாக்குபிரியும் சூழலில், தற்போது கிறிஸ்துவர் அமைப்புகளும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்தமாக அள்ளலாம் என்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கனவில் மண்விழும் நிலை உருவாகிவருகிறது.

தேசிய அளவில் முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் கட்சியாக விளங்கிய அகில இந்திய முஸ்லிம் லீக், காயிதே மில்லத் காலத்துக்குப் பின் வலிமை குன்றி பல இஸ்லாமியர் அமைப்புகள் தோன்றியதால், இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவை எதிர்த்து நிற்கும் வலுவான கட்சிகளுக்கும் வாக்களித்து வந்தனர். முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் பாஜகவைக்காட்டி அச்சுறுத்தியே இந்தக்கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

muslim population - updatenews360

இந்த நிலையில்தான், முஸ்லிம்களுக்கான தேசிய அளவில் உண்மயான மாற்றை ஒரு முஸ்லிம் கட்சிதான் தரமுடியும் என்ற முழக்கத்தை முன்வைத்து அசதுத்தீன் ஒவைசியின் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியை அசதுத்தீன் ஒவைசி தொடங்கினார். இந்தக் கட்சி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், திமுகவுக்கு விழும் முஸ்லிம் ஓட்டுகள் பிரியும் என்ற கவலையில் ஸ்டாலின் இருக்கின்றார்.

Congress_Flag_UpdateNews360

ஆனால், சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதால், கிறிஸ்தவர்கள் ஆதரவு முழுமையாக திமுகவுக்குக் கிடைக்கும் என்று ஸ்டாலின் கருதினார். தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கின்படி 44 இலட்சத்து 18 ஆயிரத்து 331 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 6.12 சதவீதம் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி 42.3 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது மாநில மக்கள் தொகையில் 5.86 சதவீதமாகும். எனவே, தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகையைவிட கிறிஸ்தவர்கள் தொகை அதிகமாகும்.

பெரும்பாலான பிரச்சினைகளில் பாஜகவின் இந்துத்துவா கோட்பாடுகளை வலிமையாக எதிர்க்காமல் சமரசப்போக்கையே காங்கிரஸ் கடைபிடித்தது. முஸ்லிம்களுக்குத் தங்களைவிட்டால் வேறு வழியில்லை என்று கருதிக்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், மென்மையான இந்துத்துவாப் போக்கைக் கடைபிடித்து இந்துக்களின் ஆதரவைப்பெறவே பெரிதும் முயன்றனர். இதனால், முஸ்லிம்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்களும் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதால் சிறுபான்மை வாக்குகளை அதிமுக இழக்கும் என்றும், அவை அப்படியே திமுகவுக்குப் போகும் என்று கனவு கண்ட ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தரும் வகையில் லுத்தரன் திருச்சபை அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

christians - updatenews360

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர்கள் மாநாடு மற்றும் கிறிஸ்துமஸ் கூடுகை நிகழ்ச்சி, திருச்சி தபால் நிலையம் அருகே உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து 148 ஆயர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிறப்புரையாற்றிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. இது கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறினார். அவரை தொடர்ந்து பேசிய லூத்தரன் திருச்சபையின் திருச்சி தரங்கை பேராயர் டேனியேல் ஜெயராஜ், தமிழ் லுத்தரன் திருச்சபையில் மூன்றரை இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் உள்ள நிலையில், வருகிற 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, இந்த அரசு மீண்டும் அமைய ஜெபித்தும், ஆசீர்வதித்தும் களப்பணி ஆற்றி, வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 12 சதவீதம் இருக்கும் சிறுபான்மையினர் திமுக அணிக்கு கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பார்கள் என்று கருதிய ஸ்டாலின், கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான திருச்சியில் அதிமுகவை ஆதரிக்க கிறிஸ்தவர்கள் முடிவு செய்ததை அறிந்து மனம் நொந்து போயிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளும் அதிமுகவை ஆதரிக்கும் வாய்ப்புகள் தெரிவதால், 2021 தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேயும் வேறு அணிகளுக்கு இடையேயும் பிரியும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே, ரஜினி வருகையால் அச்சத்தில் இருக்கும் ஸ்டாலின் முஸ்லிம், கிறிஸ்துவ வாக்குகளும் முழுமையாகக் கிடைக்காது என்ற நிலையில் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.

Views: - 6

0

0