படப்பிடிப்புகளுக்கு அனுமதி..! ஆனா சில கன்டிஷன்களை அறிவித்த மத்திய அரசு..!

23 August 2020, 4:48 pm
movie_shooting 1- updatenews360
Quick Share

டெல்லி : பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. தற்போது, 7வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், சினிமா படப்பிடிப்புகளுக்கு மட்டும் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை. இதனால், சுமார் 5 மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் சினிமா துறையைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

பெரிதும் பாதிக்கப்பட்ட சினிமா துறை ஊழியர்களுக்கு நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இதனிடையே, சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அதாவது, பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது, 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், குறைந்த ஊழியர்களை பயன்படுத்தி படப்பிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், படப்பிடிப்பு தளங்களில் மைக், கேமரா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பிறகு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும், உடைகள், ஒப்பனை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பிறருக்கு பகிர்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

நடிக்கும் போது தவிர்த்து மற்ற நேரங்களில் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம், ஒப்பனை கலைஞர்கள் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.