பெருநகர காவல்துறையால் காவலர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘CL APP’: இனி விடுமுறை பெறுவது ஈஸிதான்!!

Author: Rajesh
21 January 2022, 2:17 pm
Quick Share

சென்னை: பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலியை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் காவலர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், CLAPP என்ற விடுப்பு செயலியை பெருநகர காவல்துறை உருவாக்கியுள்ளது. இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் முதல், சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி நிலையில் உள்ளவர்கள் வரை தங்களின் பணிச்சுமைக்கு இடையே தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விடுப்பு பெற வேண்டி வழிவழியாக உதவி ஆய்வாளர், ஆய்வாளர், உதவி ஆணையாளர் அவர்களை நேரடியாக சந்தித்து மனு சமர்ப்பித்து விடுப்பாணை பெற்று, பின்னர் ஆயுதப்படை அலுவலகத்தில் தினசரி நாட்குறிப்பில் முறையாக பதிந்து செல்லவேண்டும்.

இது கடினமான பணியாக இருப்பதால் காவல் ஆளிநர்களின் நலன் கருதி இந்த CL app செயலி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் ஆளிநர்கள் தங்களிடம் உள்ள கைப்பேசியில் தமிழ்நாடு காவல் CL App என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நேரடியாக தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, வாராந்திர அனுமதி விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டி இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

இது வழிவழியாக அவர்களுடைய மேல் அலுவலர்களுக்கு சென்றடையும். விடுப்பு ஆணை பெற்றுக் கொண்ட காவல் ஆளிநர்கள் நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று கடவுச்சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம்.
ஈட்டிய விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளை பொறுத்தவரை காவல் ஆணையாளர் அலுவலக விடுப்புப் பிரிவு மற்றும் நிர்வாக அலுவலர் சரிபார்ப்பிற்குப்பின், பணிப்பதிவேட்டில் பதிவு செய்து காவல் துணை ஆணையாளருக்கு விடுப்பு ஆணை பெறுவதற்கு அனுப்பப்பட்டு விடுப்பு ஆணை வழங்கப்படும்.

இந்த செயலியில் ஒவ்வொரு காவல் அலுவலருக்கும் மூன்று மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேர காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து மேலனுப்ப தவறினால் படிப்படியாக காவல் ஆளிநர்களது கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயர் அலுவலர்களை சென்றடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலி, காவல் ஆளிநர்களின் விடுப்பு எடுக்கும் நடைமுறை சிரமத்தை முழுமையாக குறைப்பதோடு, வெளிப்படையான தன்மையை உருவாக்குகிறது.இணையதளம் வசதி இல்லாதவர்கள் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டுள்ள ’CL App V2’ செயலி மூலம் குறுஞ்செய்தி வாயிலாக விடுப்பு பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

Views: - 634

0

0