ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஸ்டவ் அடுப்பு..! இஸ்ரோவையே வியக்கவைத்த தமிழக அரசு பள்ளி மாணவி..!
27 February 2021, 12:04 pmஅரசு பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பது இந்த 9’ஆம் வகுப்பு மாணவி மூலம் மீண்டும் நிரூபிக்கபப்ட்டுள்ளது.
கரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9’ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவி எஸ்.தபஸ்வினி, தனது ராக்கெட் அடுப்பு புராஜெக்ட் 28’வது வருடாந்திர தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரசுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 புராஜெக்ட்களில் ஒன்றாக இருந்ததால் ஆச்சரியத்தில் உறைந்துள்ளார்.
மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடமிருந்தும் இந்த திட்டத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார். மேலும் கரூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசு பள்ளி திட்டம் இது என்பது மாணவி தபஸ்வினிக்கும் அவர் பயிலும் பள்ளிக்கும் மிகப்பெரிய தருணமாக மாறியுள்ளது.
ஒரு எலக்ட்ரீஷியனின் மகளான தபஸ்வினி, “இந்த ராக்கெட் அடுப்பு மூலம் நிமோனியா மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும். ஏனெனில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் புகையே வராது. சமகால மற்ற தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது இது சுற்றுச்சூழலுக்கு ஏதுவானது மற்றும் செலவு குறைந்ததாகும். இது நியூட்டனின் மூன்றாவது விதியான ஒவ்வொரு செயலுக்கும், சமமான மற்றும் எதிர்வினை உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டது.” எனக் கூறினார்.
தபஸ்வினியின் வழிகாட்டிகளான டி.திலகவதி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஜி.ராதிகா ஆகியோர், இந்த திட்டம் விஞ்ஞானிகள் உட்பட அறிவியல் ஆர்வலர்களிடமிருந்து ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய திலகவதி, “நான் கடந்த 12 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழிகாட்டி, என்.சி.எஸ்.சி நிகழ்விற்கான உள்ளீடுகளை அனுப்பி வருகிறேன். இந்த ஆண்டு, தபஸ்வினியின் புராஜெக்ட் முதலில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டது.
இப்போது தேசிய அளவில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இறுதிப் போட்டியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்கின் போது, இஸ்ரோ விஞ்ஞானி ராமானுஜம் இந்த திட்டத்தை மிகவும் பாராட்டினார்.
இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். இதற்கான தேசிய அளவிலான நிகழ்வு மார்ச் முதல் வாரத்தில் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.” எனக் கூறினார்
0
0