2021ல் யார் ஆட்சி…? ஸ்டாலின் ஆசையை ‘ஒரே’ வார்த்தையில் தவிடுபொடியாக்கிய முதலமைச்சர்…!
7 August 2020, 9:45 pmசென்னை: 2021ம் ஆண்டில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
தமிழக அரசியல்களம் கடந்த சில வாரங்களாக 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. பல அரசியல் கட்சிகளும், தனித்தனியே சர்வேக்களை எடுத்து வைத்துக் கொண்டு பரபரப்புடன் காய்களை நகர்த்தி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு என்பது வரை சென்றிருக்கின்றன.
தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்குத்தான் அரியணை வாய்ப்பு வழங்கி வருகின்றனர். இதுதான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நிகழ்ந்து வருகிறது. ஆனால் இந்த தேர்தல் எப்படி இருக்கும் என்று கணிக்கமுடியாத அளவுக்கு இருப்பதாக கூறுகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள்.
காரணம்.. மிக பெரிய ஆளுமைகளான கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. இவ்விரு தலைவர்களும் இல்லாத நிலையில் தான் அதிமுகவும், திமுகவும் தேர்தலை சந்திக்கின்றன.
ஆனால் திமுகவோ, எப்படியும் 10 ஆண்டு வனவாசம் முடிந்து ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்துவிடும் என்று கணக்குபோட்டு வருகிறது. அதற்கேற்ப வட நாட்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை களம் இறக்கிவிட்டுள்ளது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிதான் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார்.
இன்றும் கூட கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், மக்களின் வெறுப்பால் அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக அரியணை ஏறும். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.
இது ஒரு பக்கம் இருக்க… ஸ்டாலினின் இந்த பேட்டி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், யார் ஆட்சி அமைய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது மக்கள். ஸ்டாலின் இது பற்றி பேசிவிட்டால் என்ன செய்ய முடியும்?
அடுத்த ஆட்சியை யாருக்கு தர வேண்டும் என்ற உரிமை மக்களுக்கு தான் உள்ளது. எனவே மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார். ஸ்டாலின் கணக்கு என்றுமே வெற்றி பெறாது, மக்கள் அதிமுகவை தான் மீண்டும் அரியணையில் அமர வைப்பார்கள் என்று சூசகமாக சொல்லி உள்ளார் முதலமைச்சர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.