கட்டாயம் நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

16 January 2021, 12:32 pm
Maduri cm inaugurate vaccine - updatenews360
Quick Share

மதுரை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்டாயம் தானும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்ற நிலையில், பாதிப்புகளுக்கு ஏற்றவாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்த தடுப்பூசியின் டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 266 இடங்களில் ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில், 166 முகாம்கள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- கொரோனா பரவல் தற்போது சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் தீவிர முயற்சியினால் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படும். முதல் தடுப்பூசி செலுத்திய பிறகு 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து, 42 நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்தத் தடுப்பூசியை மருத்துவர்களே முதலில் போட்டுக் கொண்டுள்ளனர். யாரும் அச்சப்பட வேண்டாம். பொதுமக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கட்டாயம் நானும் தடுப்பூசியை போட்டுக் கொள்வேன், எனக் கூறினார்.

Views: - 10

0

0