வரும் 8ம் தேதி மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை..!
5 September 2020, 3:34 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வரும் 8ம் தேதி மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 4.51 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.92 லட்சத்தை கடந்திருப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சென்னையைத் தொடர்ந்து மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று எண்ணிக்கை முன்பை விட கூடுதலாகியுள்ளது.
கடந்த 1ம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி உள்ளிட்ட முக்கிய தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், வரும் 8ம் தேதி மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா சிகிச்சை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மாவட்ட வாரியாக கொரோனா சிகிச்சைகள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
0
0