‘காலத்தால் அழியாத கலாம் அய்யா’ : முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து..!

Author: Babu
15 October 2020, 12:41 pm
edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : நாட்டின் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 89வது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஏவுகணை நாயகன் எனப் போற்றப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கடந்த 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்தார். ராமேஸ்வரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது வாழ்நாளை மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக மாற்றினார். இதனால், அவரது பிறந்த நாளை உலக மாணவர்கள் தினமாக ஐ.நா. அறிவித்தது.

இந்திய விண்வெளித்துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கிய அவருக்கு, பத்ம பூஷண் (1981), பத்ம விபூஷண்(1990), பாரத ரத்னா (1997) உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. அதோடு, நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் பதவியையும் அவர் அலங்கரித்தார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

அவரது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த நாளில் அவரது சாதனைகளையும், நினைவுகளையும் அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் பழனிசாமி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்” என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 52

0

0