தமிழக காவல்துறையினர் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம் : ஓசூர் கொள்ளையர்கள் கைதுக்கு முதலமைச்சர் பாராட்டு..!!

23 January 2021, 11:45 am
Quick Share

சென்னை : ஓசூரில் தனியார் நிறுவனத்தில் கொள்ளையடித்த திருடர்களை, 18 மணிநேரத்தில் கைது செய்த போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் வழக்கம் போல நேற்று காலை 9.30 மணி அளவில் வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் போல 6 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்துள்ளது. கையில் துப்பாக்கிகள் மற்றும் கத்தியுடன் வந்த அவர்கள் துப்பாக்கியை காட்டி நிதி நிறுவன மேலாளர் சீனிவாச ராகவா மற்றும் ஊழியர்கள் மாருதி, பிரசாத், காவலாளி ராஜேந்திரன் மற்றும் வாடிக்கையாளரான ஓசூர் பஸ்தி பகுதியைச் சேர்ந்த ராஜூ ஆகியோரை தாக்கி கை, கால்களைக் கட்டிப்போட்டனர். மேலும் ஊழியர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் பிளாஸ்திரி ஒட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அந்த கும்பல் நிதிநிறுவன லாக்கரின் சாவியை வாங்கி அதிலிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். நிதி நிறுவன வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆய்வு செய்தார். கொள்ளையர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி வந்திருந்தனர். முகமுடியும் அணிந்து இருந்தனர்.

ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் இதைப்போல நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டுள்ள கும்பலுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தினர்.
முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் இந்தியில் பேசிக்கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே கொள்ளைக்கும்பல், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் வழியாக தப்பி சென்றது தெரிய வந்தது. மேலும், ஆனேக்கல் அருகே பஸ்திபூர் என்ற இடத்தில் அவர்கள் ஓசூர் நிதி நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசராகவிடம் பறித்த செல்போனை, வீசிச்சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அங்கு கிடந்த காலி பை ஒன்றையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர். தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு பையை எடுத்து அதில் நகைகளைப் போட்டு கொண்டு தப்பி சென்று உள்ளனர். அந்த பை ஜி.பி.எஸ். டிராக்கிங் டிவைஸ் பொருத்தப்பட்ட பை ஆகும்.

இதன் மூலம் அந்த பையை கொள்ளையர்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்தபோது அவர்கள் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிக்கு சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து சிக்னலை ஆராய்ந்தபோது, கர்நாடகாவிலிருந்து சந்தேகத்திற்குரிய சில நபர்கள் பைகளை வைத்துக்கொண்டு ஐதராபாத் சென்றது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சக்திவேல் தலைமையிலான குழு அவர்களை பின்தொடர்ந்து ஐதராபாத்தில் 6 பேரை கைது செய்தனர். 6 பேரும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொள்ளையர்களை 24 மணிநேரத்திற்குள் கைது செய்த கிருஷ்ணகிரி போலீசாருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என தெரிவித்தார்.

Views: - 0

0

0