தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..!
18 September 2020, 5:28 pmபி.பி.ஓ. திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :- நமது நாட்டின் 2ம் மற்றும் 3ம் அடுக்கு நகரங்களில் பி.பி.ஓ. மற்றும் ஐ.டி.இ.எஸ். ஆகிய துறைகளை ஊக்குவிப்பதற்காகவும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும் அறிமுகப்பட்டுள்ள பி.பீ.ஓ ஊக்குவிப்புத் திட்டத்திற்காக பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். ரூ.493 கோடி மதிப்பீட்டில் இந்தியா முழுவதும் 48,300 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பி.பீ.ஓ ஊக்குவிப்புத் திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமாக இருந்து வருகிறது. சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ.யில் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டுள்ள 100 இடங்களைச் சேர்த்து, 7,705 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 8,587 பேர் நேரடியாகவும், 16,774 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் வெற்றி விகிதம் 93 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
தமிழகத்தின் 2வது மற்றும் 2வது அடுக்கு நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 51 அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தமிழக அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பிற்கு துணை புரிகிறது. எனவே, பி.பீ.ஓ ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.