காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

28 August 2020, 10:51 pm
Quick Share

சென்னை: வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார். நாளை இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காங். எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது;- வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது. வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு. எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில் ;- தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் முக்கிய ஒருவராக உயர்ந்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உழைத்த திரு. வசந்தகுமார் அவர்களின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் இழப்பாகும். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று பணிபுரிந்த நிலையில் அவருடைய மரணம் பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

காமராஜரின் தொண்டராக, தொழிலதிபராக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட திரு. ஹெச். வசந்த குமார் அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

இதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வசந்தகுமாரை நான் புன்னகை மன்னன் என்றுதான் அழைப்பேன். அவர் முகத்தில் நான் கோபத்தையே பார்த்ததில்லை. இறப்பு செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. காங். எம்.பி. வசந்தகுமார் நட்பிற்கு இலக்கணம் என தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் செய்தியில், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவு அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிப்பதாக கூறியுள்ளார்.

Views: - 34

0

0