புதிய அத்தியாயம் சிறந்து விளங்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

8 July 2021, 12:38 pm
Quick Share

சென்னை : மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட எல்.முருகனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள் விலகல் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவு, மத்திய அமைச்சர்களின் ராஜினாமா ஆகியவற்றால் புதிய அமைச்சரவை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர் அடங்கிய 43 பேர் நேற்று மத்திய அமைச்சர்களாகவும், இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மீன்வளம்‌, கால்நடை வளர்ப்பு மற்றும்‌ பால்‌ பண்ணை வளர்ச்சி; தகவல்‌ மற்றும்‌ ஒலிபரப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் எல்,முருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

அதேபோல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “மாண்புமிகு பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 172

0

0