மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்… நீட் எனும் அநீதியை ஒழிக்கும் வரை நாம் ஓயமாட்டோம் : முதலமைச்சர் ஸ்டாலின்

By: Babu
15 September 2021, 4:57 pm
Quick Share

நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நீட் தேர்வு முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை. தமிழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேர்வு அச்சத்தினால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி என அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும், தற்கொலை முடிவு சரியானதல்ல என்று அரசியல் தலைவர்களும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது :- கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட போது, என்ன மனநிலையில் இருந்தனோ, அதே மனநிலையோடுதான் தற்போதும் இருக்கிறேன். தனுஷ், கனிமொழியைத் தொடர்ந்து இன்று சவுந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேள்வி பட்டதும் சுக்கு நூறாக உடைந்து விட்டேன். இந்த வேதனையை விட இனி இதுபோன்ற நடந்து விடக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது.

பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவு இப்பதான் கொஞ்சம் திறந்திருக்கு. அதனையும் இழுத்து மூடும் தேர்வுதான் நீட். கல்விப் பயில தகுதி தேவையில்லை. கல்வி கற்றால் தகுதி தானாக வந்துவிடும்.

ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நாசமாக்கும் நீட் தேர்வு. திமுக ஆட்சியின் போது நீட் தேர்வு கொண்டு வரவில்லை. சிலரின் சுயலாபத்திற்காக நீட் தேர்வை அனுமதித்தார்கள். மத்திய அரசு இந்த விவகாரத்தில் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது.

திமுக அமைத்த ஆணையத்திடம் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனடிப்படையில், நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இன்னும் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள். கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள். கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம். நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 81

0

0

Leave a Reply