ஆளுநரை ஒருமையில் திட்டினாரா CM ஸ்டாலின்…? வைரலாகும் வீடியோ… இது நல்லதுக்கல்ல… எச்சரிக்கும் பாஜக..!!

Author: Babu Lakshmanan
14 January 2023, 4:26 pm
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக ஆளுநரை கடுமையாக விமர்சித்ததாக கூறி, திமுகவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைப்பதே சரியானதாக இருக்கும் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த சர்ச்சை அடங்குவதற்கும், சட்டப்பேரவையில், திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட பெயர்களை தவிர்த்து விட்டு உரை நிகழ்த்தினார்.

RN Ravi - Updatenews360

அடுத்தடுத்த அவரது இந்த செயல்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இருப்பினும், முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் குறித்து விமர்சிக்கக் கூடாது என்று திமுகவினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அப்படியிருந்தும், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசு எழுதி கொடுத்ததை முழுமையாக படிக்காத ஆளுநரை தகாத வார்த்தையில் பேசியும், அவரை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து, அம்பேத்கர் பெயரை சொல்லாத அவரை, ஜம்மு காஷ்மீருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், போலீஸிலும் ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை ஒருமையில் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேடையில் பேசிய அவர், “தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என ஒருத்தன் பொலம்பீட்டு இருக்கானே” எனக் கூறிவிட்டு, இதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேணாம் என சொல்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரைத்தான் பெயரைக் குறிப்பிடாமல் ஒருமையில் பேசியிருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யா,”ஆளுநரை அவமரியாதையாக பேசுவதுதான் அரசியல் என முதல்வர் திரு. ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கின்றார். தி.மு.க-வின் மூன்றாம் தர தொண்டர்கள் ஆர்ப்பரிக்க முதல்வர் தன் மாண்பை இழக்க வேண்டாம், அது நல்லதல்ல!

ஆளுநரை இதுபோன்று தரக்குறைவாக பேசுவது முதலமைச்சருக்கு நாகரீகமல்ல. அவர்களின் முடிவுரையை அவர்களே எழுதுகிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு புத்திமதி சொல்லி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், பொறுமையிழந்து அவரே இப்படி பேசுவது தவறான முன்னுதாரணம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 428

0

0