ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன…? நீட்டா… நிவாரணமா..! பரபரக்கும் அரசியல் களம்…!!

Author: Babu Lakshmanan
28 November 2021, 3:48 pm
Quick Share

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திடீரென்று சந்தித்துப் பேசியது, வழக்கமான சந்திப்பை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முதலமைச்சருடன், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோரும் சென்றிருந்ததால் அவர்கள் தொடர்புடைய இலாகாக்கள் குறித்தும் ஆளுநரிடம் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்தது.

வெள்ள நிவாரணம்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்து பேசியது, மத்திய -மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு, தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டது ஆகிய செய்திகளுக்கு இணையாக இந்த சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டது.

மத்திய அரசிடம் வெள்ள நிவாரணத் தொகை கோரியுள்ள நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சரும், அமைச்சர்களும் விரிவாக எடுத்துக் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து அனைத்து தனியார் செய்தி சேனல்களும், ஒருசேர இன்னொரு பரபரப்புத் தகவலையும் வெளியிட்டன. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பும் அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

மாறுபட்ட கருத்து

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புக்கு இணையாக நீட் தேர்வு ரத்து சட்ட மசோதா குறித்து ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் அழுத்தம் கொடுத்ததாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், சட்டப்பேரவையில் செப்டம்பர் 13-ம் தேதி, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்குகோரும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

Neet Governor - Updatenews360

தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித் தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறும் நோக்கில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டமசோதாவை, குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைக்கும்படி ஆளுநரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார் என்று அந்த செய்தியை காட்சி ஊடகங்கள் மிக விரிவாக வெளியிட்டன.

ஆனால் ஆளுநர் மாளிகை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பிலோ நீட் தேர்வு சட்ட மசோதா பற்றி பேசியதாக எதுவும் கூறடப்படவில்லை. இந்த சந்திப்பின்போது மழை, வெள்ள பாதிப்பு நிலவரம், கொரோனா நிலவரம் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சரிடம் பேசியதாக ஒற்றை வரியில் கூறப்பட்டிருந்தது.

திமுக அரசு குறித்து கிண்டல்

இது மிகவும் முரண்பாடாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, ஒரு பிரபல சமூக ஊடகம், “
“ஆளுநரை சந்தித்த முதலமைச்சர், நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தியதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் மழை,வெள்ள பாதிப்பு நிலவரம், கொரோனா நிலவரம் குறித்து பேசியதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது. முதலமைச்சர் சொல்வது ஒன்று ஆளுநர் மாளிகை சொல்வது வேறு” என்று தலைப்பிட்டு தமிழக அரசை கிண்டல் செய்துள்ளது.

இது வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த கருத்தை வைத்து நெட்டிசன்கள் “மக்களை எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்ற முடியும்? மக்கள் எல்லோருமே உபிக்களா, என்ன?” என்று திமுக அரசை கலாய்த்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “தமிழக ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசியபோது, மழை வெள்ளப் பாதிப்பு குறித்து மட்டுமின்றி நீட் தேர்வு ரத்து சட்ட மசோதா தொடர்பாகவும், முதலமைச்சரும், அமைச்சர்களும் விவாதத்திருக்க வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக கடந்த 4 ஆண்டுகளாகவே கூறி வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இரண்டாவது கூட்டத்தொடரின் கடைசி நாளான செப்டம்பர் 13-ம் தேதிதான் அதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் அதற்கு முதல் நாளே அதாவது செப்டம்பர் 12-ம் தேதியே நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

திமுக அரசுக்கு பின்னடைவு

இதன் முடிவுகள் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டு விரைவில் கவுன்சிலிங் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டிய பொறுப்பு, திமுக அரசுக்கு உள்ளது. எனவே அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு ரத்து சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தால்தான் அதிலிருந்து விலக்கு பெற முடியும். ஆனால் நீட் தேர்வுதான், மாணவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என்று உறுதிபட கூறி வரும் பாஜக அரசு மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.

அவ்வாறு இருக்கும்போது, பாஜக ஆதரவுடன் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் எவ்வாறு இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தருவார் என்பது மிகப்பெரிய கேள்வி. அதேபோல் குடியரசுத் தலைவர் மூலம் மத்திய பாஜக அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி இந்த சட்ட மசோதாவை ஆய்வு செய்து, அதன் மீது முடிவெடுக்க நீண்ட நாட்கள் ஆகலாம். அதற்குள் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விடும். இது நடந்துவிட்டால், திமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

அதுமட்டுமின்றி அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத நிலை திமுக அரசுக்கு ஏற்படலாம்.

மேலும் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, இதை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்யும் என்றும் திமுக கருதுகிறது.

பொய்யான வாக்குறுதி கொடுத்து சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று விட்டது என்று நிச்சயம் அதிமுக உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்பதும் உறுதி. அதனால் ஆளுநரிடம் நீட் தேர்வு ரத்து சட்ட மசோதா குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் ஆளுநர் மாளிகையை பொறுத்தவரை நீட் தேர்வு விவகாரம் சட்ட ரீதியானது என்பதால் அதுபற்றி தங்களது செய்திக்குறிப்பில் கூறுவதை தவிர்த்து இருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 252

0

0