சம்பா பருவ பயிர்களுக்கு ரூ.1,597 கோடி இழப்பீட்டு தொகை : முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்..!!!

Author: Babu Lakshmanan
18 October 2021, 12:33 pm
Cm stalin farmers scheme - updatenews360
Quick Share

சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத்‌ தொகையான 1597.18 கோடி ரூபாய்‌ சுமார்‌ 6 இலட்சம்‌ விவசாயிகளுக்கு வழங்கும்‌ பணியை முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ ‌தொடங்கி வைத்தார்‌.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று தலைமைச்‌ செயலகத்தில்‌, வேளாண்மை – உழவர்‌ நலத்துறை சார்பில்‌, சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத்‌ தொகையான ரூ.1597.18 கோடியை சுமார்‌ 6 இலட்சம்‌ விவசாயிகளுக்கு வழங்கிடும்‌ விதமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்‌ தொகைக்கான சான்றிதழ்களை வழங்கி தொடங்கி வைத்தார்‌.

வேளாண்மையில்‌ தொடர்‌ வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின்‌ ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்‌. உணவுப்‌ பாதுகாப்புடன்‌ கிராமப்புற விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும்‌, அவர்களுக்கு தொடர்‌ வருமானம்‌ கிடைத்திடவும்‌, மாநில அளவில்‌ நிலையான பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும்‌ வேளாண்மையில்‌ நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும்‌ இன்றியமையாததாகும்‌. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு
தமிழ்நாட்டின்‌ வரலாற்றிலேயே முதல்முறையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்களின்‌ தலைமையிலான அரசால்‌ வேளாண்மைத்‌ துறைக்கென 2021-22ஆம்‌ ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்‌ செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வேளாண்மை துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர்‌ நலத்துறை என்று பெயர்‌ மாற்றம்‌ செய்யப்பட்டு இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து நிலையான வேளாண்‌ வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது.

2020-2021ஆம்‌ ஆண்டில்‌, பயிர்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ குறுவை, சம்பா மற்றும்‌ குளிர்காலப்‌ பருவப்‌ பயிர்கள்‌ 42.75 இலட்சம்‌ எக்கர்‌ பரப்பளவு பயிர்‌ காப்பீடு செய்வதற்காக, 25.76 இலட்சம்‌ விவசாயிகள்‌ பதிவு செய்தனர்‌. குறுவை (காரீப்‌) பருவத்திற்கான இழப்பீட்டுத்‌ தொகையாக ரூ.133.07 கோடி, 2,02,335 விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையிலான அரசால்‌, நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும்‌ தமிழக விவசாயிகளின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு 2021-22ஆம்‌ ஆண்டில்‌ பயிர்காப்பீட்டுத்‌ திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.2327 கோடி நிதியினை, 2021-22 ஆம்‌ வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில்‌, 2020-2021 ஆம்‌ ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின்‌ பயிர்‌ காப்பீட்டுக்‌ கட்டண மானியமாக ரூ.1553.15 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்‌ காரணமாக, 2020-2021 ஆம்‌ ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கு (சம்பா நெற்பயிர்‌ உட்பட) இழப்பீட்டுத்‌ தொகையான ரூ.1597.18 கோடியில்‌, இப்கோ-டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனத்தின்‌ மூலம்‌ ரூ.1,089.53 கோடியும்‌, இந்திய வேளாண்‌ காப்பீட்டு நிறுவனத்தின்‌ மூலம்‌ ரூ.507.65 கோடியும்‌, சுமார்‌ 6 இலட்சம்‌ விவசாயிகளுக்கு தற்போது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டுத்‌ தொகையை பாதிக்கப்பட்ட 6 இலட்சம்‌ விவசாயிகளுக்கு வழங்கிடும்‌ விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்‌ தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்‌.

மேலும்‌ 2021-2022ஆம்‌ ஆண்டு சம்பா பருவ பயிர்களைக்‌ காப்பீடு செய்ய 26.08.2021 அன்று தமிழ்நாடு அரசால்‌ 16.08.2021 ஆம்‌ நாளிட்ட வேளாண்மை – உழவர்‌ நலத்துறை அரசாணை (டி) எண்‌1414 ல்‌ ஆணை வெளியிடப்பட்டு, விவசாயிகள்‌ சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீட்டுக்‌
கட்டணத்தை (பிரீமியத்தை) செப்டம்பர்‌ 15ம்‌ தேதி முதல்‌ செலுத்தி வருகின்றனர்‌. 13.10.2021 வரை, 61871 விவசாயிகளால்‌ பயிர்க்‌ காப்பீடு செய்யப்‌ பதிவு செய்யப்பட்டு, 67556 எக்கர்‌ பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளின்‌ நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும்‌ பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தில்‌ அனைத்து விவசாயிகளும்‌ பதிவுசெய்து தங்கள்‌ பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வேளாண்‌ பெருமக்களை கேட்டு க்கொண்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ. இறையன்பு, வேளாண்மை – உழவர்‌ நலத்துறை செயலாளர்‌ சி. சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர்‌ ஆ. அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌ துறை இயக்குநர்‌ ஆர்‌. பிருந்தாதேவி, அரசு உயர்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ பயிர்‌ காப்பீட்டு நிறுவனங்களின்‌ உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Views: - 602

0

0