114.46 கோடியிலான மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் : ரூ.26 கோடி மதிப்பிலான பல கட்டிடங்களும் திறப்பு
Author: Babu Lakshmanan19 January 2022, 2:00 pm
சென்னை : ரூ.26.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.114.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.1.2022) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 26 கோடியே 66 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வருவாய்த்துறையானது மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி, இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் மதுரை மாவட்டம் – திருமங்கலம் ஆகிய இடங்களில் 9 கோடியே 85 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள்;
திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி, வேலூர் மாவட்டம் – குடியாத்தம், இராணிப்பேட்டை மாவட்டம் – அரக்கோணம் மற்றும் மதுரை மாவட்டம் – திருமங்கலம் ஆகிய இடங்களில் 1 கோடியே 48 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடங்கள்;
வேலூர் மாவட்டம் – கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் – அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோவில் ஆகிய இடங்களில் 14 கோடியே 76 இலட்சத்து 91 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள்; திருவள்ளூர் மாவட்டம் – ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய இடங்களில் 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் என மொத்தம் 26 கோடியே 66 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 16 கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், மயிலாடுதுறையில் 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இவ்வளாகம் 6.54 ஏக்கர் நிலப்பரப்பில், 2,84,946 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்களுடன் 63 பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்களை உள்ளடக்கி கட்டப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0