ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா… மத்திய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்… அதிகாரிகளின் தவறுகளை சுட்டிக் காட்டிய தமிழக பாஜக!!!

7 July 2021, 12:26 pm
Letter mistake - updatenews360
Quick Share

மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை உடனே திரும்ப பெற வலியுறுத்துக் கோரும் விதமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அண்மையில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

படைப்புச் சிந்தனையை முடக்கும் மசோதா

இதையடுத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விரிவான
கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், “ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 திரைத்துறைக்கு மட்டுமல்லாமல் கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சமூகத்தின் பல தரப்பினரிடமும் தீவிர அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த மசோதா, 20 ஆண்டுகளுக்கு முன் உச்ச நதிமன்றத்தால் மத்திய அரசிடமிருந்து நீக்கப்பட்ட திருத்த அதிகாரங்களை மீண்டும் தக்கவைப்பதன் மூலம், அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

CM Stalin Order - Updatenews360

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களுக்குச் சான்றளிக்கிறது. சில குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், சான்றளிக்காமல் அத்திரைப்படத்தை நிராகரிக்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. ஒரு படைப்பைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டப்பிரிவுகளைச் சேர்ப்பது 21-ம் நூற்றாண்டில் அதிகப்படியானதாகத் தோன்றுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி, ஒரு திரைப்படம் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் பொதுமக்கள் பார்வைக்கு சான்றளிக்கப்பட்டால், அது முதலில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருகிறது. ஏனெனில், சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இப்போது, ​​மத்திய அரசு, முன்மொழிந்துள்ள மசோதாவின் மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மாநில அரசு மற்றும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் அதிகாரங்களை மத்திய அரசு மீற முயல்கிறது.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சான்றளித்த பின்னர், மறுசீரமைப்பு அதிகாரத்தை மீட்டெடுக்கும் வரைவு திருத்தம், திரைத்துறையின் படைப்புச் சிந்தனையை முடக்குவதாகும். மேலும், எப்படித் திரைப்படங்களை உருவாக்கவேண்டும் என்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானதாகும்.

கருத்துச் சுதந்திர உரிமையைத் திருப்பி எடுப்பது ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும். 3 பிரிவுகளின் கீழ் சான்றிதழின் வயது வாரியாகத் தொகுத்தல் மற்றும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சான்றளித்த பின்னர் ஒரு திரைப்படத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது, திரைப்பட உருவாக்கத்தை மிகவும் ஆபத்தான மற்றும் நிச்சயமற்ற ஒரு தொழிலாக மாற்றிவிடும். ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021-ஐ திரும்பப் பெற வேண்டும் எனவும், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, தங்களது வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின்,மத்திய அமைச்சருக்கு உடனடியாக கடிதம் எழுதியதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமநாராயணன், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மன்னன் ஆகியோர் அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

வேறு துறைக்கு கடிதம்

இந்த நிலையில் தமிழக பாஜக செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

அதில், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். இது எனக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளிக்கிறது. ஆனால் அந்த கடிதம் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குத்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும். இது எப்படி நிகழ்ந்தது? என்பது ஆச்சரியமாக இருக்கிறது!” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

மூடி மறைக்க முயன்ற முதலமைச்சர் அலுவலகம்

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகிய இருவருக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறக்கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாராயணன் திருப்பதி இன்னொரு ட்விட்டை வெளியிட்டார்.
அந்த பதிவில், “இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவை திரும்ப பெறவேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதிய கடிதம் குறித்து பதிவிட்டிருந்தேன். இந்த கடிதமானது ‘தகவல் மற்றும்
ஒலிபரப்புத்துறை’ அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அனுப்பி இருக்கவேண்டிய நிலையில் தவறுதலாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தப் பிழையை எனது சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன். அதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் ரவி சங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அதே கடிதத்தில் சிறு திருத்தம் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

ஆனால் முதலமைச்சர் அலுவலகத்தில் இதுபோன்ற கவனக்குறைவு நடந்து இருப்பது வருந்தத்தக்கது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டு, தவறை சரி செய்து விட்டோம் என்று பதிவிட்டிருந்ததால் இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது, அதிகாரிகள் கவனமாக இருப்பார்கள். என்னுடைய நோக்கம் முதலமைச்சரை குறை சொல்வது அல்ல. கவனக்குறைவை சுட்டிக் காட்டுவது மட்டுமே. இதற்கு முதலமைச்சர் மட்டுமே காரணமல்ல என்பதை நான் அறிவேன். பொறுப்பானவர்கள் பதற்றம் இல்லாமல் பொறுமையாக பணியாற்றுவது அவசியமாகிறது. தவறுதல் மனித இயல்புதான்” என்று கூறியிருந்தார்.

பாஜகவின் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில், “அவசர அவசரமாக அமைச்சரவை பெயரை மாற்றி அனுப்பிய இரண்டாவது கடிதத்தில் பிரஸ் ரிலீஸ் நம்பரை, போடாமல் அனுப்பி விட்டனர். மறுபடியும் முதல்ல இருந்தா?” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தக் கடிதங்கள் குறித்து நெட்டிசன்கள் கேலியாக விமர்சித்து வருவது பற்றி, திமுகவினர் கூறும்போது, “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சரியாகத்தான் கடிதம் அனுப்பி உள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சட்டத்துறை அமைச்சராகவும் இருப்பதால், இந்த சட்டத்தை இயற்றவேண்டாம் என்று கூறி கடிதம் அனுப்பி இருக்கிறார்” என்று பதில் அளித்து வருகின்றனர்.

Views: - 183

0

0