காங்., தலைவர் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு : இன்று மாலை தமிழகம் ரிட்டன்…!!!

18 June 2021, 11:33 am
stalin - sonia - updatenews360
Quick Share

டெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து பேசினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக முக ஸ்டாலின் முதல்முறையாக பொறுப்பேற்றார். அதன்பிறகு, பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றார். அங்கு அவரை திமுக எம்பிக்கள் வரவேற்றனர். டெல்லி தமிழக இல்லத்தில் அவரைத் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், டெல்லி பட்டாலியன் போலீஸார் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் நதிநீர் இணைப்பு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் 7 பேர் விடுதலை உள்பட 25 கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் முன் வைத்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் இன்று காலை 10 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்கு சென்றனர். அங்கு இருவரையும் சோனியாவும், ராகுலும் வரவேற்றனர். சோனியாவுக்கு புத்தகம் ஒன்றை ஸ்டாலின் பரிசளித்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு இல்லம் திரும்பும் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.

Views: - 225

0

0