மாநில அரசை மதிக்காத ஆளுநரின் செயல்பாடு தலைதூக்கியுள்ளது…CM ஸ்டாலின் குற்றச்சாட்டு… அதிமுக, பாஜக வெளிநடப்பு

Author: Babu Lakshmanan
25 April 2022, 12:18 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் மாநில அரசை மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா மீது முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- துணைவேந்தர் நியமனத்தில் அரசை ஆலோசிக்காமல் ஆளுநரே தன்னிச்சையாக செயல்படுகிறார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்விக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கக்கூடாது என்று பூஞ்சி ஆணையம் அளித்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.

துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது. மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது, எனக் கூறினார்.

இந்த சட்டமசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சிகளான தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளையில், துணைவேந்தர் நியமன மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக பாஜக, அதிமுக அறிவித்துள்ளது. மாணவர்களின் உயர்கல்வி சம்பந்தப்பட்டது என்பதால் இந்த மசோதாவை எதிர்ப்பதாகவும், துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் போது அரசியல் உள்நோக்கம் இருக்க வாய்ப்பு உள்ளதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தது.

Views: - 831

0

0