இலங்கைத்‌ தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Author: Babu
23 July 2021, 8:45 pm
cm stalin- updatenews360
Quick Share

சென்னை : தமிழ்நாட்டில்‌ உள்ள முகாம்‌ வாழ்‌ இலங்கைத்‌ தமிழர்களின்‌ அடிப்படை வசதிகளையும்‌ வாழ்வாதாரத்தையும்‌ மேம்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (23.7.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, பொது மற்றும்‌ மறுவாழ்வுத்‌ துறையின்‌ வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும்‌ இலங்கைத்‌ தமிழ்‌ அகதிகள்‌ மறுவாழ்வு, வெளிநாடு வாழ்‌ தமிழர்கள்‌ நலன்‌, தாயகம்‌ திரும்பியோர்‌ மறுவாழ்வு, முன்னாள்‌ படைவீரர்கள்‌ நலன்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகளின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

“தலைநிமிரும்‌ தமிழகம்‌” தொலைநோக்குத்‌ திட்டங்களில்‌ அறிவுறுத்தியபடி வெளிநாடு வாழ்‌ தமிழர்களின்‌ நலன்‌ பேணிடவும்‌, அங்குப்‌ பாதிப்புக்கு உள்ளானோர்க்கு உதவிடவும்‌, நாடு திரும்பிய வெளிநாடுவாழ்‌ தமிழர்களின்‌ வாழ்வாதாரத்திற்குத்‌ துணை நிற்கவும்‌, வெளிநாடு வாழ்‌ தமிழர்கள்‌ நலத்துறை என்ற ஒரு புதிய துறையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என்றும்‌, வெளிநாடு வாழ்‌ தமிழர்கள்‌ நலவாரியம்‌ அமைப்பதற்கும்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

இலங்கைத்‌ தமிழர்களின்‌ பிரச்சனைகளுக்குத்‌ தீர்வுகாண வழிகாட்டுதல்‌ குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என்றும்‌, முகாம்‌ வாழ்‌ இலங்கைத்‌ தமிழர்களுக்கு வீடுகள்‌ கட்டுவதற்கும்‌, குடிநீர்‌, கழிவறை வசதி, தெருவிளக்கு, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும்‌, மாதாந்திர பணக்‌ கொடையை உயர்த்தி வழங்கிடவும்‌, சமையல்‌ பாத்திரங்கள்‌ மற்றும்‌ துணிமணிகள்‌ வழங்குவதற்கான ஒதுக்கீட்டையினை உயர்த்தி வழங்கிடவும்‌ நடவடிக்கை எடுக்கக்‌ கேட்டுக்கொண்டார்‌.

மேலும்‌, இலவச சமையல்‌ எரிவாயு இணைப்பு வழங்கவும்‌, திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி வழங்கவும்‌ நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தியுள்ளார்‌. வெளிநாடு வாழ்‌ தமிழர்களுக்குத்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌, அடையாள அட்டை, கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம்‌, வெளிநாடு வாழ்‌ தமிழர்களின்‌ குழந்தைகளுக்குத்‌ தமிழ்‌ மொழியை இணைய வழியில்‌ சுற்பிப்பதற்குத்‌ தமிழ்‌ இணையக்‌ கல்விக்‌ கழகம்‌ அமைப்பது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

புதியதாக முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகங்கள்‌ தோற்றுவிக்க ஆய்வுகள்‌ மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என்று அறிவுறுத்திய மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, முன்னாள்‌ படைவீரர்‌ நலவாரியத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன்‌, முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ அவர்களின்‌ குடும்பத்தினருக்குப்‌ பயனளிக்கும்‌ வகையில்‌, திறன்மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம்‌ அளித்து, திட்டமிட்டுச்‌ செயல்பட வேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுரை வழங்கினார்‌.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்‌ திரு. ஐ. பெரியசாமி, மாண்புமிகு சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடு வாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ திரு. செஞ்சி கே.எஸ்‌. மஸ்தான்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு. கிருஷ்ணன்‌, இ.ஆ.ப., பொது மற்றும்‌ மறுவாழ்வுத்‌ துறை செயலாளர்‌ முனைவர்‌ டி. ஜகந்நாதன்‌, இ.ஆ.ப., பொதுத்துறை துணைச்‌ செயலாளர்‌ திரு. எம்‌. பிரதீப்‌ குமார்‌, இ.ஆ.ப., துணைச்‌ செயலாளர்‌ (மரபு) டாக்டர்‌ எஸ்‌. அனு, இ.ஆ.ப., அகதிகள்‌ மறுவாழ்வு மற்றும்‌ தமிழகத்திற்கு வெளியே வாழும்‌ தமிழர்கள்‌ நல இயக்குநர்‌ திருமதி ஜெஸிந்தா லாசரஸ்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

Views: - 231

0

0