பணத்தை எடுத்து வரல… மனங்களை எடுத்து வந்துள்ளேன்… அபுதாபியில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்டிமென்ட் பேச்சு…!!

Author: Babu Lakshmanan
28 March 2022, 9:44 pm
Quick Share

துபாய்க்கு வரும் போது தமிழக மக்களின் மனங்களை எடுத்து வந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதற்கட்டமாக துபாய் சென்ற அவர், அங்குள்ள உலக கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, துபாய் அமைச்சர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழலை எடுத்துக் கூறி, தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

பின்னர், அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து பேசி அவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.2,600 கோடியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

துபாய் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அபுதாபிக்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அபுதாபியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாளையுடன் அவரது துபாய் பயணம் முடிவடைய உள்ள நிலையில், இன்று அபுதாபியில் தமிழர்களிடையே நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது ;- நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்துள்ளதாக சிலர் அவதூறாக பேசி வருகின்றனர். நான் பணத்தை கொண்டு வரவில்லை. தமிழக மக்களின் மனதைத்தான் எடுத்து வந்துள்ளேன். எனது ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் வெற்றியை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனை திசைதிருப்ப வேண்டும் என்று சிலர் இதுபோன்ற பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

தமிழகத்தை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். புர்ஜ் கலீபா கட்டிடத்தில் செம்மொழி தமிழ் ஒளிர்ந்தது பெருமை அளிக்கிறது. செய் அல்லது செத்துமடி என்பார்கள். ஆனால், செய்து முடித்து செத்துமடி என்பதுதான் புதுமொழி. அதைத்தான் நான் பின்பற்றுகிறேன், எனக் கூறினார்.

Views: - 355

0

0