CM ஸ்டாலினின் வியூகம் வெல்லுமா..? டெல்லியில் காய் நகர்த்தும் திமுக… ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க திட்டம்..!!

Author: Babu Lakshmanan
11 January 2023, 9:07 pm
Quick Share

ஆளுநர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள எம்பிக்கள் மற்றும் அமைச்சர் நாளை குடியரசு தலைவரை சந்திக்க உள்ளனர்.

சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்என் ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்தார். இதனைக் கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஆளுநரின் இந்த செயல் சட்டப்பேரவையின் மரபை மீறியது என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், ஆளுநர் உரையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது தான் மரபை மீறியது என்றும், உண்மைக்கு புறம்பாக தமிழக அரசு எழுதிக் கொடுப்பதை ஆளுநர் படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது என்று பாஜக உள்ளிட்ட கட்சியினர் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் மரபுகளை மீறி ஆளுநர் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டி வரும் திமுக, இது தொடர்பாக குடியரசு தலைவரிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களுடன் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லியில் உள்ளார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க. எம்.பி.க்கள்., குடியரசு தலைவரை சந்திக்க நாளை காலை 11.45 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் சந்திப்பில் தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிக்க உள்ளனர். ஒருவேளை திமுகவின் புகாரை ஏற்று குடியரசு தலைவர் நடவடிக்கை எடுத்தால், அது திமுகவின் வெற்றியாக பார்க்கப்படும்.

Views: - 279

0

0