சொத்து வரி உயர்வுக்கு திமுக கவுன்சிலரே எதிர்ப்பு.. வீடியோ காலில் பிஸியாக இருந்த திமுக கவுன்சிலர்… கோவை மாநகராட்சி கூட்டத்தில் நடந்த களேபரங்கள்..!!

Author: Babu Lakshmanan
11 April 2022, 8:16 pm
Quick Share

கோவை: திமுக கவுன்சிலரே சொத்துவரிக்கு எதிர்ப்பு தெரிவித்தது, களேபரத்திற்கு மத்தியில் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தது என கோவை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான முதல் கூட்டத்திலேயே பல்வேறு சுவாரஸ்யங்களும், சர்ச்சைகளும் அரங்கேறியுள்ளன.

கோவை மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் தங்களது மண்டலம் மற்றும் வார்டுகள் அளவிலான குறைகள் குறித்து மாமன்றத்தில் பேசினார்கள்.

அப்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ் செல்வி கார்த்திக் கோவை மாநகராட்சியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சினைகளுக்கு அதிமுக அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார்.சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை வார்டுகளுக்கு வந்து பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு குறுக்கிட்ட நாற்பத்தி ஏழாவது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, அதிமுக கவுன்சிலரை திமுகவினர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்ததால், இருதரப்பினரிடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டிருந்ததால், மாமன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

அதிமுக உறுப்பினர்களுடன் ஒருபக்கம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையேயும் வாக்குவாதம் வெடித்தது. மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை, “தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது தவறு.” என்று பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு,“ஒரு மண்டலத் தலைவராக இருந்துகொண்டு நீங்களே இப்படிப் பேசலாமா… மத்திய அரசின் அழுத்தம் காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இனியும் இந்தச் சொத்து வரி உயர்வு குறித்து இங்கு யாரும் பேச வேண்டாம்,” என்று கூறி அனைவரையும் கப்சிப் ஆக்கினார்.

இதைத் தொடர்ந்து, சலசலப்பு நீடித்துக் கொண்டே இருந்தாலும், அதனை பொருட்படுத்தாத திமுக கவுன்சிலர்கள் பெரும்பாலும் செல்போனையே பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அதில், குறிப்பாக, 96-வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் குறை பற்றி பேசும் மாமன்றத்தில், அதுவும் இருகட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக கவுன்சிலர் இவ்வளவு அலட்சியமாக வீடியோ கால் பேசிக் கொண்டிருப்பதா..? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Views: - 697

0

0