கோவை திமுக நிர்வாகி சஸ்பெண்ட்: மேடையில் சொந்த கட்சி நிர்வாகியை வெளுத்து வாங்கிய விவகாரத்தில் நடவடிக்கை!!

Author: Rajesh
6 March 2022, 8:44 pm
Quick Share

சென்னை: திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்து திமுக தலைமை அறிவித்துள்ளது.

கோவை மேயர் வேட்பாளராக பேசப்பட்ட நிலையில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடக் கூட திமுக தலைமை சீட் கொடுக்காததால் அண்மையில் தனது ஆதங்கத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கொட்டித்தீர்த்தார் மீனா ஜெயக்குமார்.

“உன்னோட பொண்டாட்டிக்கு சீட் கிடைக்கனும் என்றால் கேட்டுட்டு போ, அதற்காக என்னோட வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?” என மேடையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கு எதிராக காட்டமாக பேசினார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகும் மறைமுகத் தேர்தலுக்கு பிறகும் திமுகவில் வரிசையாக பல முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர் நகரச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர் என சஸ்பெண்ட் பட்டியல் நீண்ட நிலையில் மகளிர் அணி மாநில நிர்வாகியான மீனா ஜெயக்குமாரும் இப்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.

முன்னதாக, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், உசிலம்பட்டியில் 4 திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது, திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu DMK Executive Committee Members Meeting In Covai
Views: - 1509

0

0