யானைகள் வழித்தடம் விவகாரம்.. தமிழக அரசின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி ; மீண்டும் விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவு…!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 2:14 pm
Quick Share

சென்னை ; யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 130க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் மூடப்பட்டன. ஆனால், மூடப்பட்ட இந்த செங்கல் சூளைகள், ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் இந்த செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செங்கல் சூளைகள் உரிய அனுமதி பெற்றுதான் செயல்படுகின்றனவா..? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியம் இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில், 23 செங்கல் சூளைகளில் ஆய்வு செய்ததாக மட்டுமே குறிப்பிட்டு, மற்ற சூளைகள் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, செங்கல் சூளை விவகாரத்தில் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினர். விரைவில் விரிவான அறிக்கை சமர்பிக்கப்படவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி இருக்கும் என்று எச்சரித்தனர்.

இதனையடுத்து, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், உறுதிமொழியை ஏற்று, இந்த வழக்கை டிசம்பர் 22ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 425

0

0