தனித்தீவா இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள்..?: கோவையில் அவல நிலையில் வாழும் கரும்புக்கடை மக்கள்..!

Author: Aarthi Sivakumar
1 December 2021, 9:53 am
Quick Share

கோவை நகருக்குள் புதிதாய் நுழைபவர்கள் நகரின் அழகைக்கண்டு பிரம்மிப்படைவார்கள். இங்குள்ள இயற்கை சூழலும், ஸ்மார்ட்சிட்டியின் உட்கட்டமைப்புகளும் புதிதாய் இந்த நகருக்குள் வரும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

ஆனால், வரலாறுகளில் பதியப்பட உள்ள அவலங்கள் இந்த நகரில் அனுதினமும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. நகரின் ஒரு சில பகுதிகளை அழகாய் வடிவமைத்து பிரம்மிப்புகாட்டும் மாநகராட்சி நிர்வாகம், ஒரு சில மக்களுக்கு ஓர வஞ்சனை செய்கிறது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில் தான் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையுடன் வசிக்கும் கரும்புக்கடை பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஓரம்கட்டி வைத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். சாலைகள் தொடங்கி கழிவறைகள், பள்ளிகள், வங்கிகள், சுகாதாரம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு பகுதியாக இருக்கிறது இந்த கரும்புக்கடை.

குட்டி கடை வீதியாக உள்ள கரும்புக்கடை மாநகராட்சியின் 75 மற்றும் 86வது வார்டுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் தங்களிடம் இருந்து அனைத்து வித வரிகளையும் வசூலிக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகம், தங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது என்று கேள்வியெழுப்புகின்றனர் கரும்புக்கடை பகுதி மக்கள்.

அவசர கதியாக வெளியே புறப்பட்டால் இங்குள்ள ஓட்டை உடசலான சாலைகள் வழியாக திக்கு முக்காடி செல்வதோடு, குவிந்திருக்கும் குப்பைகளையும், அவற்றிலிருந்து வீசும் கடும் துர் நாற்றத்தையும் நிச்சயம் கடந்தாக வேண்டும். கரும்புக்கடை பகுதி சுகாதாரத்தை இம்மியளவு கூட கடைபிடிக்காமல் கோட்டை விட்டிருக்கிறது கோவை மாநகராட்சி நிர்வாகம்.

உடலில் அனைத்து உறுப்புகளும் வளர்ச்சி அடைந்தாலே அது முழுமையான வளர்ச்சி என்பது போல், அனைத்து பகுதிகளையும் மேம்படுத்தி வளர்ச்சி அடைவதே ஒரு நகரின் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். இப்படியான வளர்ச்சியை எட்டமுடியாத கோவை மாநகராட்சி தன்னை எந்த வகையில் ஸ்மார்ட் சிட்டி என்று பெருமை பேசிக்கொள்ளலாம் என்று கேள்வி எழுப்புகின்றனர் மாநகராட்சியால் வஞ்சிக்கப்படும் மக்கள்.

Views: - 218

0

0