மகேந்திரனுக்கு நிகர் இவர்தான்… கல்லூரி அதிபரை களமிறக்கும் கமல் : சூடுபிடிக்கும் கோவை அரசியல்…!!!

Author: Babu Lakshmanan
1 December 2021, 2:16 pm
kamal - mahendran - updatenews360
Quick Share

கோவை மேயர் தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு டஃப் கொடுக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில், நகராட்சி தலைவர், மேயர் பதவியிடங்களுக்கு தேர்தல் நேரடியாகவா..? அல்லது மறைமுகமாகவா..? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. இருப்பினும், அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், எந்த முறையாக இருந்தாலும், எதிர்கொள்ள தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன.

KAMAL_HAASAN_UpdateNews360

அந்த வகையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் முழு வீச்சில் தங்களை தயார்படுத்தி வருகிறது. அனைத்து மாநகராட்சிகளிலும் போட்டியிடாமல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மட்டும் போட்டியிட கமல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த 10 மாநகராட்சிகளுக்கு மட்டும் வலுவான வேட்பாளரை களமிறக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, கட்சியின் துணைத் தலைவராக இருந்து, திமுகவில் ஐக்கியமான மகேந்திரனுக்கும், தனக்கும் இடையேயான தன்மானப் பிரச்சனையாக கோவை மாநகராட்சி தேர்தல் கமல்ஹாசனுக்கு அமைந்துள்ளது. கோவையில் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த ஆதரவு யாருக்கானது..? என்பதை நிரூபிக்கும் தேர்தலாகவும் இது அமைந்துள்ளது.

ஆதலால், சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் வலுவாக இருப்பவரையே வேட்பாளராக அறிவிக்க மக்கள் நீதி முயன்று வருகிறது.

இந்த நிலையில், மகேந்திரனுக்கு நிகராக கோவை கனியூரில் பார்க் பொறியியல் கல்லூரி நடத்தி வரும் அனுஷா ரவியை களமிறக்க கமல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. மேலும், பல்வேறு சமூக தொண்டாற்றும் அமைப்புகளுடன் இணைந்து பல நலத்திட்டங்களை அவர் செய்திருப்பதால், மக்களிடம் நன்கு பரீட்சையமானவராக இருக்கிறார். எனவே, கோவை மேயர் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக அனுஷா ரவி சிறந்த நபராக இருப்பார் என்று கருதப்படுகிறது.

அதேவேளையில், நேரடி தேர்தல் முறை அறிவிக்கப்பட்டால் மட்டுமே, அனுஷா ரவி கமலின் முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

Views: - 482

0

0