கோவை – அவினாசி மெகா மேம்பாலத்தில் மாற்றமா..? தொழில்துறையினரின் கோரிக்கையால் சின்னியம்பாளையம் மக்கள் குஷி…!!

29 January 2021, 2:22 pm
cbe bridge - updatenews360
Quick Share

சென்னையை அடுத்து மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பது கோவை. இங்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சாலை விரிவாக்கம், புதிய மேம்பாலங்கள், மாதிரிச்சாலை, குளங்கள் மேம்பாடு உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுடன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வேலைப்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கோவை – மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம் – ஆத்துப்பாலம் அவினாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் சிக்னல் – கோல்டுவின்ஸ் வரை என நகரின் முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, காந்திபுரம் பகுதியில் கோவை – சத்தி சாலை மற்றும் 100 அடி சாலை – ஆவாரம்பாளையம் சந்திப்பு வரையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இதில், பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மேம்பாலம் என்றால், சுமார் ரூ. 1,600 கோடி செலவில் தயாராகும் அவினாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் சிக்னல் – கோல்டுவின்ஸ் வரையிலான பாலம்தான். போக்குவரத்து அதிகம் உள்ளதாகக் கருதப்படும் அவினாசி சாலையில் சுமார் 10.2 கி.மீ. தொலைவிற்கு கட்டப்படும் இந்தப் பாலத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளன. ரயில்நிலையம், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றிற்கு அவினாசி புறவழிச்சாலை அருகே உள்ள மக்களும், வெளி மாவட்ட மக்களும் விரைந்து வர முடியும்.

குறிப்பாக, நகர்புறத்தில் இருந்து சித்ராவில் உள்ள விமான நிலையத்திற்கு நொடிப்பொழுதில் சென்றடைய முடியும் என்பதால், இந்த மேம்பாலத்திற்கு தொழில்துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், உப்பிலி பாளையம் சிக்னல் முதல் கேஎம்சிஎச் மருத்துவமனையைக் கடந்து உள்ள கோல்டுவின்ஸ் பகுதியுடன் முடிவடையும் இந்த நீண்ட மேம்பாலத்தை, மேலும் இரண்டு கி.மீ. வரை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழில் அமைப்புகளும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு அடுத்தடுத்து கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அதில் கூறியிருப்பதாவது :- உப்பிலி பாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் இறங்கு தளத்தை, சின்னியம்பாளைய்ம சந்திப்பை கடந்து அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். கோவையில் திட்டமிட்டு கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களின் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைக்குப் பிறகு மாற்றியமைத்திருப்பதையும், நீட்டித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

நூறடி ரோடு மேம்பாலம் – சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் வரையிலான மேம்பாலப் பணிகள், உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகள், கோவை – மேட்டுப்பாளையம் சாலை மேம்பாலப் பணிகள் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ள பணிகளாகும்.

தொழில்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இந்தப் பாலத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் எஃகு கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு மேம்பாலங்களை அமைச்சர் எஸ்பி வேலுமணியின் இசைவினால் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது, தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, தற்போது இறங்குதளம் அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு, பாலத்தை சின்னியம்பாளையம் வரையில் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Views: - 33

1

0