நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

19 September 2020, 2:03 pm
Mumbai-rain1-updatenews360
Quick Share

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 21 வரை மன்னார் வளைகுடா பகுதிகள் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 21 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 19 தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 20 தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 21 தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்ககடல் மற்றும் வடக்கு வங்ககடல் சூறாவளி காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 22 மத்தியமேற்கு வங்ககடல் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.