சொந்த ஊரு, தொகுதிக்கு கூட இப்படி செய்யலயே… கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவுக்காக பரிந்துரை : எம்பி நடராஜனுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!

Author: Babu Lakshmanan
30 June 2021, 7:30 pm
pr natarajan -updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலையின் தாக்கம் பெரியளவில் காணப்பட்டது. சராசரி பாதிப்பு 36 ஆயிரம் வரை சென்றது. ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

எனவே, பிற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், கோவையில் கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் கடைபிடிக்கப்பட்டுதான் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எந்தப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில், கோவை கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்பி நடராஜன் செய்துள்ள செயல் கோவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கொரோனா பரவல் காரணமாக கோவையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் பொது போக்குவரத்து இல்லாமலும், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இந்த சூழலில், கோவை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டாத எம்பி நடராஜன், கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு பணிக்காக வரும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், தமிழக அரசின் அனுமதியுமின்றி கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்ட கேரள அரசு பேருந்துகள், ஆட்சியரின் உத்தரவின்பேரில் நேற்று திருப்பி அனுப்பப்பட்டன. இருப்பினும், கோவை எம்.பி., நடராஜன் தலையிட்டு, ஆட்சியரிடம் பேசி, மீண்டும் இந்த பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேரளாவில் இருந்து கோவையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், கேரள அரசு பேருந்துகளில் கோவைக்கு நாள்தோறும் வந்து கொண்டுள்ளனர். பயணச்சீட்டு அடிப்படையில் இல்லாமல், ஒப்பந்த அடிப்படையில், கடந்த ஊரடங்கு காலத்தில் இருந்து இவ்வாறு பணிக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த ஒப்பந்தம், 2021 ஏப்., 30ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

கோவையில் ஊரடங்கால், இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க இயலவில்லை. சி.ஐ.டி.யு., அகில இந்திய தலைவர் திவாகரன், கோவை எம்.பி., நடராஜனை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து பேசினார். கோவை எம்.பி., தலைமையில், கேரள அரசு போக்குவரத்து கழக பாலக்காடு டிவிஷன் அலுவலர் உபைத் உள்ளிட்ட அதிகாரிகள், கோவை ஆட்சியரை சந்தித்தனர். ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்கிற அவசியத்தை விளக்கினர். இதையேற்று உடனடியாக புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. புதன்கிழமை முதல் கேரள அரசு பேருந்துகளில் பாலக்காட்டில் இருந்து எவ்வித தடையுமின்றி அரசு ஊழியர்கள், கோவைக்கு வருவார்கள், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழக அரசே தளர்வுகளை அறிவிக்க தயங்கி வருகிறது. இப்படியிருக்க, கோவை எம்பி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் இருந்து பேருந்துகளின் மூலம் அரசு ஊழியர்களை கோவைக்கு அழைத்து வருவது தொற்று பரவலுக்கு மேலும் வழிவகுக்கும் என்று கருத்து எழுந்துள்ளது.

அதேவேளையில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 100% பணியாளர்களுடன் பணியாற்ற தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்காத நிலையில், பிற மாநிலங்களில் இருந்து அரசு ஊழியர்களை அழைத்து வருவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘கோவை எம்.பி., இப்படியொரு கோரிக்கையை வைத்துள்ளார். அதைப் பரிசீலித்து அனுமதிக்கலாம் என்று ஆட்சியர் கூறியுள்ளார்’ என்றனர். ஆனால், அவரது இந்தக் கோரிக்கையை கொரோனா தொற்று பரவல் குறையும் வரை ஏற்கக் கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும், சொந்த ஊர், சொந்த தொகுதி மக்களை விட, தான் இருக்கும் கட்சியான கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திற்கு ஆதரவாக எம்பி நடராஜன் செயல்படுவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Views: - 269

1

2