கமலுக்கு ‘கோவை’ புளிக்கிறதா…? பெட்ரோல் குண்டு வீச்சால் புதிய முடிவு… இசைவு கொடுக்குமா திமுக…?

Author: Babu Lakshmanan
24 September 2022, 7:53 pm
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்தது முதலே அக்கட்சியை சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களுக்கு வேண்டாதவர்களை வெளிப்படையாக மிரட்டுவதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதை காண முடிகிறது.

அதுவும் பெண் கவுன்சிலர் திருமணமானவர் என்றால் அவருடைய கணவர் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை எண்ணமும் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துபோய் இருக்கிறது.

இதுபோன்ற சம்பவங்களின் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் உடனுக்குடன் வெளியாகி விடுவதால் அது மக்களிடம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் திமுக அரசு இதுவரை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.

“மென்மையானவர்களிடம் தான் மென்மை காட்டுவேன், கரடு முரடாக நடந்து கொள்பவர்கள் மீது சர்வாதிகாரி போல நான் மிகக் கடுமையாக நடவடிக்கை எடுப்பேன்” என்று அவ்வப்போது முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தாலும் கூட அதை அவருடைய கட்சியின் கவுன்சிலர்கள் யாருமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.

ஏனென்றால் பல பேரூராட்சிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கட்சித் தலைமையின் கட்டளையையும் மீறி, திமுகவினரே தேர்வு செய்யப்பட்டு அனுபவித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டின் மீது ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் இன்னமும் புலம்பி வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் பகுதியில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் நைட்டி உடையுடன் கோவிலுக்குள் சென்று அங்குள்ள அர்ச்சகரை மிரட்டியதும், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஒன்றிய திமுக கவுன்சிலரின் கணவர் ஒருவர்
நிலப்பிரச்சினை தொடர்பான முன்விரோதத்தில் அரிவாளுடன் சில இளைஞர்களை ஓட ஓட விரட்டிய வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல 3 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்ற தாம்பரம் தொகுதி திமுக எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை கடுமையாக திட்டியதுடன் கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் மட்டுமின்றி ஒரு சில அச்சு, காட்சி ஊடகங்களிலும் வெளியாகி திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து விட்டனர். இருந்தாலும் திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில்தான் அனைத்து தரப்பு மக்களிடமும் திமுக எம்எல்ஏ மிரட்டிய காட்சி போய்ச் சேர்ந்து விட்டதால் தங்கள் கட்சி மீது நெகட்டிவ் இமேஜ் உருவாகிவிடும் என்று பயந்துபோன திமுக தலைமை எம்எல்ஏ, எஸ் ஆர் ராஜா மீது வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு அறிவுறுத்தியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், எஸ் ஆர் ராஜா எம்எல்ஏ மீது 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் எம்எல்ஏ தரப்பினரோ, ‛‛அவர்கள் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்” என்று மறுக்கின்றனர்.

இந்த மிரட்டல் வீடியோ தொடர்பாக, கடந்த இரு தினங்களாக எந்த கருத்தும் தெரிவிக்காத நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தற்போது திடீரென விழித்துக் கொண்டு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்குச் சென்ற தாம்பரம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

பொறுப்புமிக்க சட்டப்பேரவை உறுப்பினர், தனியார் நில குத்தகை விவகாரத்தில் பஞ்சாயத்து பேசச் சென்றதும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரை மிரட்டுவதும் ஏற்கத்தக்கதல்ல. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்திருந்தாலும், திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அத்துமீறி நடந்துகொள்வதும், மிரட்டல், தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். எனவே, இவற்றைத் தடுத்து நிறுத்துவதில் தமிழக முதலமைச்சர் கவனம் செலுத்துவது அவசியம்” என்று வலியுறுத்தி உள்ளது.

“இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சமீபகாலமாக திமுகவுடன் மிகுந்த நெருக்கம் காட்டிவரும் கமல்ஹாசன் தனது அறிக்கையில் திமுக அரசுக்கு எதிராக சில கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதுதான்.

அக்கட்சியின் சார்பில் துணைத் தலைவர் தங்கவேலு இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தாலும் நடிகர் கமல்ஹாசனின் சம்மதமின்றி இது நடந்திருக்க வாய்ப்பில்லை” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“மக்கள் நீதி மய்யம் கட்சியை எப்படியும் தங்களுடைய கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் திமுக மிகத் தீவிரமாக உள்ளது. ஏனென்றால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதியில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. மேலும் சில தொகுதிகளில் அக் கட்சி ஒரு லட்சம் ஓட்டுகளுக்கும் கூடுதலாக வாங்கியது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1700 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டார். அதனால் கமல்ஹாசனுக்கும் இதில் சம்மதம்தான். அதேநேரம் அவர் எதிர்பார்ப்பது 2024 தேர்தலில் இரண்டு தொகுதிகள். ஆனால் அவருக்கு கோவை தொகுதியை மட்டுமே ஒதுக்க திமுகவோ விரும்புகிறது.

ஆனால் கடந்த இரு தினங்களாக கோவை நகரில் பாஜக, இந்து மத அமைப்பு நிர்வாகிகளின் கடைகள், வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கிய சம்பவங்களால் நடிகர் கமல்ஹாசன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பது தெரிகிறது. இதன் தாக்கம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் அவர் நினைப்பதாக கூறப்படுவதே இதற்கு முக்கிய காரணம்.

அதனால் அவர் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடாமல் மிகவும் பாதுகாப்பாக மத்திய சென்னை அல்லது தென்சென்னை தொகுதியில் களம் காணவே விரும்புவார்.

எப்படிப் பார்த்தாலும் அவருடைய இலக்கு இரண்டு தொகுதிகள். ஆனால் இதற்கு திமுக சம்மதிக்குமா? என்பது சந்தேகம்தான்.

அதற்காகவே எம் எல் ஏ எஸ் ஆர் ராஜா மிரட்டிய விவகாரம் குறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அத்துமீறி நடந்துகொள்வதும், மிரட்டல், தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். எனவே, இவற்றைத் தடுத்து நிறுத்துவதில் தமிழக முதலமைச்சர் கவனம் செலுத்துவது அவசியம்” என்று தனது கட்சியின் பதிவை காட்டமாக வைத்துள்ளார்.

அதாவது இதுவரை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்கவில்லை. நிலைமை இப்படியே போனால் தமிழக மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும் என்பதை மக்கள் நீதி மய்யம் சுட்டிக்காட்டுகிறது.

தவிர இப்போதே போய் திமுக கூட்டணியில் இணைந்து கொண்டால் தனக்கோ, தன் கட்சிக்கோ எந்த மதிப்பும், மரியாதையும் கிடைக்காது.

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளின் நிலை போல் ஆகி விடலாம். அதனால் தேர்தல் நேரத்தில் திமுக தலைமையே தன்னைத் தேடி வரவேண்டும் என்று கமல் நினைத்திருக்கக் கூடும்.

அதனாலும் அவருடைய கட்சி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இப்படியொரு அறிவுரையை வழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது என்றே கருதத் தோன்றுகிறது.

ஏற்கனவே திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான ஆ ராசா இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து திமுகவுக்கு கடும் குடைச்சலை கொடுத்து வருகிறது. தேசிய அளவிலும் இது பெரும் பேசு பொருளாகவும் மாறியிருக்கிறது.

இந்த நிலையில், திமுகவின் இன்னொரு ராஜாவாலும் தற்போது மாநில அரசியலில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்பது நிஜம்” என்றும் அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கூறியுள்ள அறிவுரையின்படி எம்எல்ஏ ராஜா மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 250

0

0