நவ.,10க்குள் சேர்க்கையை வாபஸ் பெறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் கொடுக்க கல்லூரிகளுக்கு உத்தரவு
2 September 2020, 5:18 pmபல்வேறு காரணங்களுக்காக சேர்க்கையை நவ.,10ம் தேதிக்குள் வாபஸ் பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பிச் செலுத்த அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி, மாணவர் சேர்க்கை முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (ஏஐசிடிஇ) ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், ஏதாவது காரணங்களுக்காக கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள் நவ.,10ம் தேதிக்குள் சேர்க்கையை திரும்பப் பெற்றால், அவர்களிடம் வசூலித்த முழுக் கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும். வேண்டுமென்றால், செயல்முறைக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.1,000ஐ வசூலிக்கலாம். மாணவர்களின் அசல் பள்ளி சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் வைத்துக் கொள்ள அனுமதியில்லை.
அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை கடந்து தங்களின் சேர்க்கையை திரும்பப் பெறும் மாணவர்களிடம் செம்ஸ்டர் மற்றும் ஆண்டு கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை ஒரு வாரத்திற்குள் கொடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0