தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுமா..? 29ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை..!!
25 August 2020, 12:09 pmதமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் வீரியமடைந்த நிலையிலும், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள், எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையேற்று கடந்த 17ம் தேதி முதல் விண்ணப்பித்தாலே இ-பாஸ் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனிடையே, மாநில உள் போக்குவரத்திற்கும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் அனுமதியளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தெடர்ந்து, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் உத்தரவுப்படி, இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். அப்போது, இ-பாஸ் முறையை ரத்து செய்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா..?, பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்து வருபவர்களை எவ்வாறு அடையாளம் கண்டு, தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.