குலாம் நபி ஆசாத் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு: மேலிட பொறுப்பாளர் அதிரடி மாற்றம்

11 September 2020, 11:06 pm
Quick Share

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன் கார்கே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் நிர்வாகரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களுக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளாக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக பொறுப்பு வகித்து வந்த முகுல் வாஸ்னிக் மத்தியப் பிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், செல்வகுமார் ஆகியோர் முறையே தெலங்கானா, ஒடிசா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான ஜோதிமணிக்கு கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இருந்து வந்த மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர பெயர்களும் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும் அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன் கார்கே, மோதி லால் வோரா ஆகியோரை பொதுச் செயலாளரில் இருந்து விடுவித்துள்ளது. காங்கிரஸில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கடிதம் எழுதிய 23 பேரில் குலாம் நபி ஆசாத் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0