காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையீடா..? விரிவாக பேச மறுத்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!!

Author: Babu Lakshmanan
23 January 2023, 1:32 pm
Quick Share

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மநீம தலைவர் கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்க உள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிட இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக தலைமையகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இ.வி.கே.எஸ் இளங்கோவன், “வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாகவே திமுகவினர் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள் எனவும், தொடர்ந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்கு ஈஸ்வரன், வைகோ, வேல்முருகன் ஆகியோரை சந்திப்பதோடு கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம் என்றார்.

தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்த பிறகு என்னை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவித்தது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை எனவும், ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக ஒதுக்கியது பெரிய விஷயம். அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸில் யார் வேட்பாளராக வரவேண்டும் என திமுக சொன்னதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாக திமுகவையும் கலந்து பேசி இருப்பார்கள் என எண்ணுகிறேன், என்றார்.

மக்களுக்காக வேலை செய்ய கட்சி மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. திமுக அமைச்சர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்கள். இன்றைக்கு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து விட்டு, காங்கிரஸ் மாநில தலைவரை சந்தித்துவிட்டு பிரச்சாரத்தை துவங்குகிறேன், என கூறினார்.

முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கிறேன். வருவார்… வரவேண்டும்…”, என்றார்.

Views: - 360

0

0