ஜோதிமணியை ஓரங்கட்டிய தமிழக காங்கிரஸ் : பிரச்சாரம் செய்ய விடாமல் முட்டுக்கட்டை!!!

Author: Babu Lakshmanan
30 March 2021, 4:45 pm
Jothimani - cover - updatenews360
Quick Share

தமிழக காங்கிரசில் துணிச்சலான பிரபல பெண்மணிகள் என்று பெயர் பெற்றவர்கள் என ஜோதிமணி, விஜயதாரணி ஆகியோரைச் சொல்லலாம். கட்சியில் துடிப்புடன் அதிரடியாக செயல்படுவதால், கட்சியின் டெல்லி தலைமையிடம் இவர்களுக்கு நேரடித் தொடர்பு உண்டு.

அதனால் இவர்கள் இருவரையும் தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் அவ்வளவாக பகைத்துக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக கரூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி எம்பியான 45 வயது ஜோதிமணி எதிலும் அதிரடி காட்டக் கூடியவர். தனது 22-வது வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்ததால்தான் என்னவோ, அவரிடம் தைரியமும், துணிச்சலும் மிக மிக அதிகம். ஜோதிமணி தமிழக இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராகவும், தேசிய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

rahul gandhi - updatenews360

கடந்த ஜனவரி மாத இறுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி கரூர் வந்தபோது, அவரை சைவ பிரியாணி தயாரிக்கும் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, அது தொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, ராகுல் காந்தியிடம் நற்சான்றிதழும் பெற்றவர். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காக டெல்லி செல்லும்போதெல்லாம் சோனியாவையும், ராகுல்காந்தியையும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசுவதால் ஜோதிமணியை கண்டாலே தமிழக காங்கிரசில் பல தலைவர்களுக்கு ஆகாது.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது “இந்த சீட்டுகளையெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியில் உள்ள பிரபல தலைவர்களின் வாரிசுகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் விலைபேசி விற்று விட்டனர். இந்த அநீதியை எதிர்த்து கடைசி வரை போராடுவேன். இதை அப்படியே சும்மா விடமாட்டேன்” என்று போர்க்கொடி உயர்த்தினார்.

அத்துடன் இந்த விஷயத்தை ராகுல்காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழக காங்கிரஸ் தலைவர்களான கே.எஸ்.அழகிரி, எஸ். திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், கோபண்ணா ஆகியோரின் வயிற்றில் புளியை கரைத்தும் விட்டார்.

Mla Vijayatharani- Updatenews360

ஜோதிமணி இப்படி திடீரென தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கொந்தளித்ததால்தான் தற்போதைய எம்எல்ஏவான விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவதற்கு கடைசி நேரத்தில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இது தேர்தல் நேரம் என்பதால், ஜோதிமணி எழுப்பிய பிரச்சினையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று டெல்லி காங்கிரஸ் மேலிடம் தற்காலிகமாக ஒத்தி வைத்து இருக்கிறது.

அதேநேரம் தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும், ஜோதிமணிக்கும் இடையே வெடித்த நேரடி யுத்தம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நட்சத்திர பேச்சாளரான அவரை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் முழுவதும் செல்ல முடியாதபடி தமிழக காங்கிரஸ் தலைமை முடக்கிப் போட்டுள்ளது. ஜோதிமணியை யாரும் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்களது தொகுதிக்கு அழைக்கக்கூடாது என்று மறைமுக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜோதிமணி குற்றம் சாட்டியவர்களில் பலர் தேர்தலில் போட்டியிடுவதாலும், அவரை அழைத்துப் பிரச்சாரம் செய்ய வைத்தால் வீண் வம்பைத்தான் விலைக்கு வாங்க வேண்டி இருக்கும் என்று கருதி அவர்கள் ஒதுங்கிக் கொண்டு உள்ளனர்.

மிக அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சேலம் வந்தபோது நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஜோதிமணியும் கலந்துகொண்டார். அதன் பிறகு அவர் கரூர் சட்டப்பேரவை தொகுதியில் மட்டுமே திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜிக்கு தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.

Nellai KS Alagiri Byte - updatenews360

இதுபற்றி ஜோதிமணியின் ஆதரவாளர்கள் கூறும்போது, “எங்கள் எம்பி கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி, கரூர், வேடசந்தூர் கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்” என்று தெரிவித்தனர்.

ஆனால் ஜோதிமணி கரூரிலும் அரவக்குறிச்சியிலும் மட்டுமே தற்போது மிகுந்த தீவிரம் காட்டி வருகிறார். கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்காக அவர் காட்டும் பிரச்சார வேகம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி 12 மணி நேரம் தொடர்ச்சியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவ்வப்போது அருகில் உள்ள தனது சொந்த சட்டப்பேரவைத் தொகுதியான அரவக்குறிச்சிக்கும் சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மற்றபடி அவர் வேறு எந்த சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் அண்ணாமலை ஐபிஎஸ் நிறுத்தப்பட்டுள்ளதால், அதை கவுரவ பிரச்சினையாக கருதி அடிக்கடி அரவக்குறிச்சி சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

கரூரில் செந்தில் பாலாஜி வெற்றிபெற்று ஒருவேளை, திமுக ஆட்சி அமைந்தால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை முன்வைத்து ஜோதிமணி பிரச்சாரம் செய்கிறார். இன்னும் சொல்லப்போனால் திமுகவினருக்கு இணையாக ஜோதிமணி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டும் வருகிறார் என்பதே உண்மை.

தென் மாவட்டங்களில் போட்டியிடும் சில காங்கிரஸ் வேட்பாளர்கள் அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தபோதும், என்னால் உங்களுக்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று மறுத்து ஒதுங்கிக் கொண்டு இருக்கிறார்.

ஜோதிமணியின் ஆதரவாளர்களோ, “காங்கிரஸில் 18 தொகுதிகள் வரை விலை பேசப்பட்டுள்ளது. யார் யார் எவ்வளவு கொடுத்து டிக்கெட் பெற்றனர் என்கிற விவரம் முழுமையாக எங்கள் எம்பியிடம் உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் கட்சியின் நலன் கருதி இதுபற்றி முழுமையாக கட்சி மேலிடத்துக்கு ஜோதிமணி புகார் தெரிவிக்கவில்லை. ஆனாலும் எங்கள் எம்பிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் மிகக்கடுமையாக செயல்பட்டு வருகிறார்கள். அரசியலில் ஜோதிமணி முன்னணி தலைவராக வந்துவிடக்கூடாது என்பதற்காக அநாகரிகமாகவும் நடந்து கொள்கிறார்கள். அதுவும் டெல்லி தலைமைக்கு புகார் தெரிவித்த பின்னர் அவரை வேண்டா வெறுப்பாக பார்க்கிறார்கள்.

வருகிற தேர்தலிலும் காங்கிரஸ் ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றால் அதற்கு தமிழகத்தின் தற்போதைய தலைமையே காரணம்” என்றனர்.

தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு கலைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவராக ஜோதிமணி நியமிக்கப்படுவார் என்றும் அவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான பின் தமிழக காங்கிரசில் என்ன கூத்து நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Views: - 59

0

0