பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு : காங்கிரஸ் வலியுறுத்தல்!!

30 September 2020, 6:06 pm
congress - babri masjid case - updatenews360
Quick Share

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அயோத்தியில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரங்களால் 2,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் தொடர்பாக இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன. மசூதி இடிக்கப்பட்டபோது அங்கே இருந்த எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் உள்பட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 17 பேர் இறந்து விட்ட நிலையில், 32 பேர் மீதான விசாரணை நடந்து வந்தது.

கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை எனக் கூறி, குற்றம்சாட்டப்பட்ட அத்வானி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் ஏற்புடையவை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்ட வீடியோ, ஆடியோக்களின் உண்மை தன்மையை சிபிஐ நிருபிக்கவில்லை என்றும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோர் வன்முறையாளர்களை தடுக்க மட்டுமே முயன்றதாகவும், சமூக விரோதிகள்தான் பாபர் மசூதியின் மீது ஏறி நின்று இடித்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு வரவேற்புகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவிற்கும் எதிரானது. மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்து விட்டது. தற்போதைய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் மேல்முறையீடு செய்ய வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 7

0

0