திமுக – காங்., இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு? கொடுக்கும் தொகுதிகளை பெற இருப்பதாக தகவல்…!!

7 March 2021, 8:53 am
Quick Share

சென்னை : திமுக – காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 30 தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால் முந்தைய தேர்தல் மற்றும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வியை சுட்டிக்காட்டி, 20 முதல் 25 தொகுதிகளுக்குள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. மேலும், திமுக தங்களை நடத்தும் விதம் சரியில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு தன்மானம்தான் மிகவும் முக்கியம் எனக் கூறி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி கண்கலங்கினார்.

இதனிடையே, கூட்டணி கட்சிகள் 8ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும், திருச்சியில் இன்று நடக்கும் மாநாட்டில் கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைமை நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது.

இந்த சூழலில் நேற்று இரவு 11 மணியளவில் சென்னையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு காங்கிரஸ் தலைவர்கள் சென்று, சுமார் 40 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து தினேஷ் குண்டுராவ் பேசியதாவது :- திமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கையெழுத்திட உள்ளோம், தொகுதிகள் எண்ணிக்கை உள்பட பிற விபரங்களை கையெழுத்திட்ட பிறகு தெரிவிப்போம், என்றார்.

Views: - 16

0

0