நிதியை பெருக்க லாட்டரி அவசியம் : கார்த்தி சிதம்பரத்தால் அதிரும் தமிழக காங்.,!!!

Author: Babu
26 July 2021, 9:59 pm
lottery - congress - updatenews360
Quick Share

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்கும் ஏழாம் பொருத்தமோ என்னவோ தெரியவில்லை.

கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேர்மாறாக அவருக்கு பதிலடி கொடுப்பதுபோல அழகிரி தனது கருத்து பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

லாட்டரி இல்லா தமிழகம்

கடந்த சில மாதங்களாக கார்த்தி சிதம்பரம் தமிழகத்தில் கேளிக்கை, சூதாட்ட விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக பேசி வருகிறார். மதுபான கடைகளை மூடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

online Lottery- updatenews360-min

ராஜா வீட்டு கன்றுக்குட்டிபோல் கார்த்தி சிதம்பரம் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார். அண்மைக் காலமாக மூன்று விஷயங்களை வலியுறுத்தி அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.

2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் லாட்டரி சீட்டை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தடை செய்தார். அப்போது சுமார் 35 லட்சம் பேர் தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி இருந்தனர். மார்ட்டின் போன்ற லாட்டரி சீட்டு அதிபர்கள் மற்றும் ஒரு சில பெரும் முகவர்கள் மட்டும் கோடி கோடியாய் சொத்து சேர்த்தனர்.

அதேநேரம் லாட்டரி மோகத்தால் வீடுகளில் இருந்த வெள்ளி, தங்க நகைகள், அண்டா, குண்டாக்களை அடமானம் வைத்தும், விற்றும் மாதந்தோறும் இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கு ஆண்டு கணக்கில் லாட்டரி சீட்டு வாங்கி அதற்கு அடிமையானவர்கள் எல்லாவற்றையும் இழந்து தெருக் கோடிக்கு தள்ளப்பட்டதுதான் மிச்சம்.

தற்போது மாநிலத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டாலும் கூட, தமிழகத்தில் உள்ள 20 வயதுக்கும் உட்பட்ட 90 சதவீத இளைஞர்களுக்கு லாட்டரி சீட்டு என்றாலே என்னவென்று தெரியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

அதனால்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு லாட்டரி சீட்டை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சூதாட்டத்திற்கு ஆதரவு

இந்த நிலையில்தான், கார்த்தி சிதம்பரம் மீண்டும் லாட்டரி சீட்டை தமிழகத்தில் கொண்டு வரவேண்டுமென்று திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். திமுக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே லாட்டரி சீட்டு தொடர்பான விவாதத்தை பொதுவெளியில் வைத்து வரும் அவர், ஒரு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் லாட்டரி சீட்டு, டாஸ்மாக், கிரிக்கெட் சூதாட்டம் ஆகிய மூன்றுமே தேவை என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Karthi Chidambaram - Updatenews360

தரமான கல்வியும், மருத்துவ சேவையும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு நிதி ஆதாரத்தை பெருக்கவேண்டும். எனவே தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை அறிமுகம் செய்யலாம்.

ஆதார் கார்டு மூலம் ஒருவர் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 100 ரூபாய்க்கு லாட்டரி சீட்டை வாங்கிக்கொள்ள அரசு அனுமதிக்கவேண்டும். ஆன்லைன் வழியாகவே இதை மேற்கொள்ளலாம்.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதுபோல லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. வாங்க விரும்புபவர்கள் தங்களுக்கு விருப்பமான 6 இலக்க நம்பர்களைக் கூட தேர்வு
செய்துகொள்ள முடியும். ஒரு குடும்பத்தில் 5 பேர் ஆதார் கார்டு மூலம் லாட்டரி சீட்டு வாங்கினாலும் கூட மாதத்திற்கு 500 ரூபாய்க்கு மேல் செலவாகாது.

அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை அரசே நடத்தலாம். தற்போது, ஐபிஎல் கிரிக்கெட்டில்
ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய் வரை பெட்டிங் நடக்கிறது. அரசாங்கமே முறைப்படுத்தி நடத்தினால் 10 சதவீத வரி மூலம் 750 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் கார்த்தி சிதம்பரம் ஒரு யோசனையை கூறுகிறார்.

அதுமட்டுமன்றி டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயமும் மாபியா கும்பலும் உள்ளே வந்துவிடும். அரசு மதுபான கடைகளை மூடிவிட்டால் யாரும் குடிக்காமல் இருக்க போவதில்லை.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மதுக் கடைகள் மூடப்பட்ட நிலையில் ஏராளமானோர் பக்கத்து மாநிலங்களுக்கு மது வாங்க சென்ற காட்சிகளையும் நாம் பார்த்தோமே” என்றும் சொல்கிறார்.

கேஎஸ் அழகிரி பதிலடி

கார்த்தி சிதம்பரம் டிவிக்கு அளித்த பேட்டியில் என்ன கூறியிருப்பார் என்பதை முன்கூட்டியே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி யூகித்து இருப்பாரோ, என்னவோ தெரியவில்லை. இதே பிரச்சினைகள் குறித்து அவரும் செய்தியாளரிடம் அதே நாளில் பேசினார். அவருடைய கருத்துகள் கார்த்தி சிதம்பரத்திற்கு நச்சென்று பதிலடி கொடுப்பது போலவே இருந்தது.

Nellai KS Alagiri Byte - updatenews360

அவர் கூறும்போது, “லாட்டரி சீட்டு விற்பனை, டாஸ்மாக் மதுபான கடைகள் போன்றவை மக்களுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அரசாங்கத்தை நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல. இதை காங்கிரசும் ஏற்றுக்கொள்ளாது. கொள்கை ரீதியாக இந்த விஷயங்களில் காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னாரோ, அதற்கு நேர் எதிராக கே.எஸ். அழகிரியின் கருத்து உள்ளது. காங்கிரஸ்காரர்களின் மனதில் இதுபோன்ற சிந்தனையே எழக்கூடாது என்பதுபோல் அவரது பதில் அமைந்திருக்கிறது.

வேண்டாத விஷப்பரீட்சை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கே.எஸ். அழகிரியும், கார்த்தி சிதம்பரமும் பேசுவது வேடிக்கையாக உள்ளது. திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை இழுத்து மூடுவோம் என்று கூறியிருந்தது. இப்போது திமுகவின் ஆட்சிதான் அமைந்திருக்கிறது. அதனால் திமுக அரசிடம் மதுபான கடைகளை மூடிவிடுங்கள் என்று அழுத்தம் கொடுக்கலாம். மாறாக கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம் என்று அழகிரி கூறி நழுவிக் கொள்கிறார்.

இப்படி தங்களுக்கு பிடிக்காத அரசின் திட்டங்களையெல்லாம் கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம் என்று கூறி தப்பித்துக் கொண்டால் இவர்களிடம் என்னதான் கொள்கை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

கார்த்தி சிதம்பரமோ பணக்கார வீட்டுப்பிள்ளை, வெளிநாட்டில் படித்தவர் என்பதால் அவருடைய சிந்தனையெல்லாம் கேளிக்கை விளையாட்டுகள் மீதே இருக்கிறது.

Tasmac - Updatenews360

மதுபான கடைகள் பெருகியதன் மூலம் அதிக பாதிப்புக்கு உள்ளானது, நடுத்தர வர்க்கத்தினரும், அன்றாட கூலி வேலை பார்ப்பவர்களும்தான். இவர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்தால் 300 ரூபாயை குடிப்பதற்கு செலவிட்டு விட்டுவிடுகின்றனர். மொடாக் குடியர்களில் பலர் 500 ரூபாய்க்கும் குடித்து விடுவார்கள். இதனால் அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுகிறது. வீடுகளில் கணவன் மனைவிக்கிடையே தினமும் சண்டை நடக்கிறது. சில பெண்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளும் வேதனையான நிகழ்வுகளும் அன்றாடம் நடக்கின்றன.

இது இன்னும் அதிகமாவதைத்தான் கார்த்தி சிதம்பரம் விரும்புகிறாரா?… பணக்கார வீடுகளில் இதுபோல் யாரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற செய்திகள் வெளிவருவதில்லை.

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவந்தால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மீது இருபக்க தாக்குதல் நடத்தப்படும் என்றே அர்த்தம். இது வேண்டாத விஷப்பரீட்சை.

பெண்களும் அடிமையாக வாய்ப்பு

ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு 500 ரூபாய்க்கு மேல் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்காது என்று கார்த்தி சிதம்பரம் கூறுகிறார்.

ஆனால் அரசு மாதாந்திர பரிசு சீட்டு திட்டத்தை மட்டுமா நடத்தும்? வருவாயை பெருக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டு வாரத்திற்கு ஒரு முறை, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்று பல அடுக்குகளாக குலுக்கல்கள் இழுத்துக்கொண்டே போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?… அப்படி பல லாட்டரி சீட்டுகள் நடத்தப்பட்டால் மாதத்துக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் ரூபாய் என்று லாட்டரி சீட்டு வாங்கி போண்டியாகும் குடும்பங்கள் அதிகமாகிவிடும். மதுவுக்கு அடிமையானவர்களில் 90 சதவீதம் பேர் ஆண்கள். லாட்டரி சீட்டு வந்தால் ஆசை தூண்டப்பட்டு
பெண்களும் ஆண்களுக்கு இணையாக இதற்கு அடிமையாகி விட வாய்ப்புகள் அதிகம். இது மிகப்பெரிய ஆபத்து.

Lottery - updatenews360

தமிழகத்தில் நடுத்தர வர்க்கத்தினரும், கீழ்த்தட்டு மக்களும் சுமார் 80% பேர் உள்ளனர். அதனால் லாட்டரி, மதுபானம் இரண்டாலும் அதிகம் பாதிக்கப்படுவது இவர்கள்தான்.

அரசுக்கு வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்களை வறுமையின் கோரப் பிடிக்குத் தள்ள விரும்பும் தமிழகத்தின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரத்தின் யோசனைகளை தமிழக அரசு ஒருபோதும் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று அவர்கள் வலியுறுத்தி கூறினர்.

Views: - 203

0

0