பாஜகவுக்கு வந்தால் ரத்தம் திமுகவுக்கு வந்தால் மட்டும்… பிரதமர் மோடி அதை ஏற்றுக்கொள்வாரா..? கேஎஸ் அழகிரி கேள்வி

Author: Babu Lakshmanan
11 January 2023, 7:18 pm
Quick Share

வருகின்ற ஜனவரி 19ம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடர்ச்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக ‘அரசியலமைப்பை பாதுகாப்போம், கையோடு கை கோர்ப்போம்’ என்ற பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், மேலிட பார்வையாளர் கொடிக்குனில் சுரேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த கே எஸ் அழகிரி மற்றும் தினேஷ் குண்டு ராவ் பேசியதாவது :- அரசியலமைப்பை பாதுகாப்போம் – கையோடு கை கோர்ப்போம் என்ற பிரச்சார இயக்கத்தை ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தமிழகம் முழுவதும் இந்த நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மரபு மீறிய, மக்கள் முகம் சுளிக்கிற காரியத்தை ஆளுநர் ரவி செய்திருக்கிறார். தமிழகம் போன்ற ஜனநாயக பூங்காவில் ரவியை போன்ற ஆளுநர் செயல்பட முடியாது. காவல்துறையின் பின்புலம் கொண்டவருக்கு ஜனநாயகத்தை பற்றி தெரியாது.

தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு ஆளுநர் வெளியே சென்றுள்ளார். மத்திய அரசின் அறிக்கையை குடியரசு தலைவர் மாற்றி படித்தால் பாஜக மற்றும் மோடி ஏற்றுக்கொள்வார்களா..? என கேள்வி எழுப்பிய கேஎஸ் அழகிரி, அதிகாரத்தை வைத்து ஆர்எஸ்எஸ் தமிழகத்தை மிரட்டிப் பார்க்கிறது என்றும், ஆளுநரின் ஜனநாயக விரோத போக்கை தமிழக அரசியல் கட்சியினர், பொது மக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர், என்றார்.

மேலும் வரும் ஜனவரி 19 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் பேசியதாவது :- மக்களின் தினசரி பிரச்சனைகளை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பேசியிருக்கிறது. வன்முறை மற்றும் பிரிவினைவாதம் தற்போது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சமூக பிரச்சனையாக இருக்கிறது.

பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றினாலும், நாம் அனைவரும் ஒருவர் தான். அரசியலமைப்பை பாதுகாப்போம், கையோடு கைகோர்ப்போம் பிரச்சார இயக்க மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களை வீடு வீடாக காங்கிரஸ் கட்சி சென்றடையும். மேலும், ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு மாநிலங்களின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது, என குற்றம்சாட்டினார்.

Views: - 277

0

0